குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘எஸ்கார்ட் 2020’ – மதுரையில் துவக்கம்!

மதுரை: குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்யும் வகையில், மதுரை நகரில் ‘எஸ்கார்ட் 2020’ என்ற பெயரிலான ஒரு மீட்புக் குழு துவங்கப்பட்டுள்ளது.

விஜய சரவணன் என்பவர் இக்குழுவின் தலைவராக உள்ளார். அவர் கூறியதாவது, “கணவருடன் ஏற்பட்ட பிரச்சினைக் காரணமாக, குழந்தையை தூக்கிக்கொண்டு கோபத்தில் வெளியேறி, ஒரு பெண் மதுரை வந்தார். அவரிடம் விசாரித்து, தந்தையிடம் பாதுகாப்பாக சேர்த்தோம்.

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, ‘எஸ்கார்ட் 2020’ என்ற பெயரில் மீட்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு குழந்தைகள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 9789515915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.