மதுக்கடை வாசல்களில் ’’கூலிப்படை’’
கொரோனா வைரஸ் இந்தியாவில் நேற்று பல்வேறு ஊர்களில் ‘காமெடி ஷோ’ க்களை காட்டி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளில் தான் இந்த கூத்துக்கள் அரங்கேறின.
விரோதிகளை கொலை செய்ய கூலிப்படையினர் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினர், முதியோர் என சிலர், கூலிக்கு ஆட்களை பிடித்து மதுக்கடை வாசலில் கியூவில் நிற்க வைத்து மதுபானங்களை வாங்கியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, ஒய்ட்பீல்ட், காக்கடஸ்புரா போன்ற இடங்களில் உள்ள மதுபான கடைகள் முன்பு பெண்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இரக்கப்பட்ட சரக்கு கடை உரிமையாளர்கள், பெண்களுக்கு தனி கியூவை ஏற்பாடு செய்து, சரக்கு கொடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள ஒரு மதுபானக்கடை உரிமையாளர், தனது வாடிக்கையாளர்களை, பூக்கள் வழங்கி வரவேற்று, சரக்கு அளித்து கவுரவம் செய்துள்ள வீடியோ, வைரலாக பரவி வருகிறது.