டில்லி

ஸ்கார்ட்ஸ் நிறுவனம் எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டிலும் ஓடும்  கலப்பின டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்திக்கு முன் உரிமை அளிக்கப்பட்டு வருகிறது.   இந்தியாவின் முதல் மின்சார கார் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.   கிராமப்புறங்களில் கார்களை விட டிராக்டர்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.    அதிலும் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

பிரபல டிராக்டர் உற்பத்தி நிறுவனமான எஸ்கார்ட்ஸ் நிறுவனம் சென்ற வார இறுதியில் ஒரு புதிய வகை டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.   இந்த டிராக்டரை நிறுவனம் கலப்பு  இன டிராக்டர் எனக் குறிப்பிட்டுள்ளது.   இந்த டிராக்டர்கள் டீசலிலும் இயங்கக் கூடியது, மற்றும் மின்சாரத்திலும் இயங்கக் கூடியது என்பதால் இந்த டிராக்டர்களை கலப்பு இன டிராக்டர் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிமுக விழாவில் இந்நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நிகில் நந்தா, “எங்களது புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியின் மூலம் ஒருவான இந்த டிராக்டர் உலகத் தரம் வாய்ந்தது ஆகும்.   இந்த டிராக்டர்கள் விவசாயத்தில் மட்டுமின்றி கட்டுமானப்  பணிகளிலும் பயன்படுத்தக் கூடியவை ஆகும்.   இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காற்று மாசாவது தடுக்கப்படுவதுடன் விவசாய உற்பத்தியும் மேம்படும்.

 

இந்த டிராக்டர்கள் 70 முதல் 75 குதிரைச் சக்தியை அளிக்கும்.   இதன் அதிகபட்ச சக்தி 90  குதிரைச் சக்தி ஆகும்.   இந்த டிராக்டர்கள் மின்சாரம் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வகையில் மட்டுமின்றி மின்சாரத்தில் மட்டும் இயங்கும் வகையிலும் மற்றும் டீசலில் மட்டும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.   அதே நேரத்தில் இந்த டிராக்டர்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.