விமானங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் நிறுத்திய எதிஹாட் ஏர்வேஸ்

புதாபி

ரபு விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தனது விமானங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் நிறுத்தி உள்ளது.

உலகில் உள்ள பல விமான சேவை நிறுவனங்கள் ஒரு முறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட பல பொருட்களை உபயோகித்து வருகின்றன. உலக சுகாதார மையத்தின் அறிவுரைப்படி இவ்வாறு மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகள் உபயோகிப்பது பல நாடுகளில் தடை செய்யபட்டுள்ளது. இதற்கு மாற்றாக பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரபு விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் உலகின் பல நாடுகளிலும் தனது சேவைகளை செய்து வருகிறது. மற்ற பன்னாட்டு விமான சேவைகளை விட இந்த நிறுவனத்தில் கட்டணம் ஓரளவு குறைவு என்பதால் பயணிகள் பலரும் இந்த நிறுவன சேவையை மிகவும் விரும்பி வருகின்றனர்.

எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தற்போது தனது விமானங்களில் ஒரு முறை உபயோகப்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக நிறுத்தி உள்ளது. இதை சிறிது சிறிதாக அதன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் நிர்வாகம் அமுல்படுத்த தொடங்கி உள்ளது. தற்போது உள்ள நிலையில் விமானங்களுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் நிறுத்திய ஒரே விமான நிறுவனம் எதிஹாட் ஏர்வேஸ் ஆகும்.