பாரிஸ்: ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரா, முள்கரண்டி, கத்தி மற்றும் காதுகுடையும் பருத்தி பட்ஸ் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் முடிவை எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்த தடை வரும் 2021ம் ஆண்டில் அமலுக்கு வரும். ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவால், மேற்கண்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சி நடவடிக்கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, கடற்கரை மற்றும் கடலில் கலக்கும் குப்பைகளில் 85% பிளாஸ்டிக் குப்பைகளாக இருக்கின்றன. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதோடு, மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளும் நிகழ்கின்றன.

இறந்துபோன பல திமிங்கலங்களின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கண்டெடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. மேலும், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை செய்வதில்லை என்று சீனா எடுத்திருக்கும் முடிவும், ஐரோப்பிய யூனியனை இந்த நடவடிக்கையை நோக்கி தள்ளியுள்ளது.

இந்த முடிவுக்கு ஆதரவாக 560 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பதிவாகின. இதன்படி, மொத்தம் 10 வகையான ‘ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள்’ தடைசெய்யப்படவுள்ளன.

– மதுரை மாயாண்டி