பாரிஸ்: ஐரோப்பாவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மொத்தம் 11 ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நார்வ‍ே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள்தான் அவை. பெரியளவில் ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நாடுகளில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவும் விகிதம் 1க்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களை, இந்த ஆய்வுக்குழு மதிப்பிட்ட மரண எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஊரடங்கு நடவடிக்கைகளின் மூலம் சுமார் 3.1 மில்லியன் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஆய்வில், சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு தடுப்பு நடவடிக்கைகள், 530 மில்லியன் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதை தடுத்துள்ளன அல்லது தாமதப்படுத்தியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.