ஓஸ்லோ: தனியார் போக்குவரத்து வாகனங்களின், குறிப்பாக கார்களின் போக்குவரத்தை தலைநகரில் கட்டுப்படுத்த, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நார்வே நாடு.

தனியார் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளை களைவதற்காக, பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் சமீபகாலங்களில் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

லண்டன் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களில், போக்குவரத்து நெருக்கடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, தனியார் வாகனப் போக்குவரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாரிஸ் நகரில் குறிப்பிட்ட நாட்களில் கார்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டதும் நடந்தது.

இந்நிலையில், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பல பொது கார் பார்க்கிங் தளங்களை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு இறுதியில், ஓஸ்லோ நகரில் 700 பார்க்கிங் தளங்கள் அரசால் மூடப்பட்டன. அந்த இடங்களில் பென்ச்சுகள், சைக்கிள் நிறுத்துமிடங்கள் மற்றும் இதர பயனுள்ள அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்கள் மாற்றுத்திறனாளிகள் நன்மைக்காகவும், சிறு வணிக நடவடிக்கைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், வளரும் இந்தியாவிலோ நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டுள்ளது.