லண்டன்:

ந்தியாவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிஏஏக்கு, என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐராப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.  இது  இந்தியஅரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக பதவி ஏற்றதைத்தொடர்ந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370ஐ ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்தது. மேலும் தேசிய மக்கள் பதிவேடு,தேசிய குடியுரிமை திருத்தம் போன்ற சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.

இதற்கு நாட்டில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான்  இந்த பிரச்சினையை ஐ.நா.விலும், அமெரிக்க அதிபர் டிரம்பிடமும் கூறி இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டி வருகின்றன.

ஆனால், இந்தியா, இது உள்நாட்டு பிரச்சினை என்று கூறி, மற்ற நாடுகள் தலையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில்,  இந்தியாவில் அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கும்என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில்,  காஷ்மீர் விவகாரம், சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிராக  5 பக்கங்கள் கொண்ட தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், இந்த தீர்மானத்துக்கு  150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள்  ஆதரவு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்மானத்தில்,  இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காகவே இந்த சட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும், இதுபோன்ற  சட்டம் பயன்படுத்தப்பட்டால் ஏராளமான மக்கள் நாடற்றவர்களாக்கப்படுவர். குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும் வகையில் உள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியபடி,  இந்தசட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது, அடக்கு முறையானது. எனவே இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல் குறித்த  பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். அமைதியாக போராட அனுமதியுங்கள்.

குடியுரிமை சட்டத்தையும் அதன் விளைவுகளையும் சமத்துவம், பாகுபாடற்றதன்மை, சர்வதேச கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யுங்கள்.

இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ள வன்முறை யானது மிருகத்தனமானது என்று கண்டிக்கிறோம் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்வதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 182 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய மக்கள் கட்சி (கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்) தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆதரவாக  சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் முற்போக்குக் கூட்டணியின் குழு (எஸ் & டி) 154 உறுப்பினர்கள், 108 உறுப்பினர்களைக் கொண்ட புதுப்பித்தல் குழு, அத்துடன் பசுமைவாதிகள் / ஐரோப்பிய சுதந்திர கூட்டணி (74), ஐரோப்பிய கன்சர்வேடிவ்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் (ஈ.சி.ஆர்) (66), மற்றும் ஐரோப்பிய ஐக்கிய இடது-நோர்டிக் பசுமை இடது (GUE / என்ஜிஎல்) (41). ஆகிய கட்சிகளும்  செயல்பட்டு வருகின்றன

வரும் மார்ச் 13-ம் தேதி இரு நாடுகளுக்கிடையேயான மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவின் பிரசல்ஸ் செல்ல உள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக தீர்மாபனம் நிறைவேற்றப்பட்டால் இரு நாடுகளிடையே உள்ள உறவு பாதிக்கப்டும் என அஞ்சப்படுகிறது.