ஜெனிவா: சீன வீடியோ கண்காணிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹைக்விஷன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் பொருட்களை, விலை கொடுத்து வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்கள்.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த உய்குர் பழங்குடியினர் மீது, சீன அரசு பல மனிதஉரிமை மீறல்களை நிகழ்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து சுமத்தி வருகின்றன. ஆனால், இதை சீன அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், அம்மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தந்து, அவர்களுக்கு கைத்தொழிலும் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக சீன அரசு புகைப்படங்கள் வெளியிட்டதையடுத்து, எதிர்ப்புகள் சற்று ஓய்ந்திருந்தன.

ஆனால், தற்போது, சீன வீடியோ கண்காணிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹைக்விஷன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் பொருட்களை, விலை கொடுத்து வாங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மனித உரிமை சட்டங்களை மதிக்காமல் சீன அரசு நடந்துவரும் நிலையில், ஐரோப்பிய யூனியன் சார்பில், சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹைக்விஷன் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவதையும் தவிர்க்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் மனிதவள மேம்பாட்டுத்துறை கமிஷனர் ஜோனஸ் ஹேனிடம் ஹைவ்விஷன் நிறுவனம் புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளது.