இந்திய காய்கறிகள் மீதான தடையை நீக்கியது  ஐரோப்பிய யூனியன்


இந்தியாவில் இருந்து கத்திரிக்காய் போன்ற சிலவகை காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டுகள் தடையை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டது.

இந்தியாவில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழம், பாகற்காய், புடலங்காய், கத்திரிக்காய் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

இந்த காய்கறிகளை விளைவிக்கும்போது பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் இந்தத் தடையை விதிப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.

இதையடுத்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், மாம்பழங்கள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியது. இத ந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு கூட்டம்  இந்திய காய்கறிகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய்தது.

அப்போது, கத்திரிக்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் மீதான ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்திய காய்கறிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தற்போது விலக்கிக்  கொண்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய வேளாண் அமைச்சகத்தில் இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி துறை துணை இயக்குநர் ஆர்.எஸ். அரோரா தெரிவித்துள்ளார்.