பாரிஸ்: எதிர்வரும் ஜூலை 1ம் தேதி ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறக்கப்படுகையில், அமெரிக்கப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று யூனியன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கொரோனா பரவல் காரணமாக, ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் வெளிநாட்டவர்கள் யாரும் யூனியன் எல்லைக்குள் நுழைய முடியாது. இந்நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி, வெளிநாட்டவர்களுக்காக ஐரோப்பிய யூனியன் எல்லைகள் திறக்கப்படவுள்ளன.

அப்படி திறக்கப்படுகையில், அமெரிக்கப் பயணிகளுக்கு அனுமதி கிடைக்காது என்று ஐரோப்பிய யூனியன் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு கோடையின்போதும், பல லட்சம் அமெரிக்கப் பயணிகள் ஐரோப்பிய யூனியனுக்கு வருவது வழக்கம்.

அமெரிக்காவோடு சேர்த்து, ரஷ்யா மற்றும் பிரேசில் நாட்டுப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாடுகளும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எனவே, அந்நாடுகள் முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை, இந்த நிலை தொடரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.