பீஜிங், சீனா

சீனாவில் வனவிலங்கு  விற்பனைக்கு அரசு விதித்த தடையை மீறி ஆன்லைனில் விற்பனை நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மாதிரி புகைப்படம்

சீனாவில் வன விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவதும் அவற்றின் வர்த்தகமும் மிக அதிக அளவில் இருந்தது.  இதற்கு முக்கியமான காரணம் சீன மக்களின் உணவுப் பழக்கம் எனக் கூறப்பட்டது.  அது மட்டுமின்றி வன விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், தோல் பொருட்களுக்கு உலகெங்கும் தேவை உள்ளது.   எனவே வன விலங்குகள் விற்பனை அதிக அளவில் இருந்தது.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவி தற்போது உலக மக்களை கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ளது.   சீனர்களின் உணவுப் பழக்கத்தை இதற்காகப் பலரும் குறை கூறினார்கள்.,  வன விலங்குகள் மூலம் கொரோனா தொற்று தொடங்கியதாகவும் கருத்துக்கள் எழுந்தன.  அதையொட்டி கடந்த ஜனவரி மாதம் வன விலங்கு பொருட்கள் விற்பனைக்குச் சீன அரசு தடை விதித்தது.

இதனால் கடந்த ஜனவரி மாதம் சீனாவின் இ காமர்ஸ் நிறுவனங்கள் சுமார் 1,40,000 பொருட்களை விற்பனை பட்டியலில் இருந்து நீக்கின.  இவை அனைத்தும் வன விலங்குகளின் மாமிசம் மூலம் செய்யப்படும் மருந்து, தோல் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகும்.  அத்துடன் இந்த வர்த்தகம் தொடர்பான 17000 கணக்குகள் மூடப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கபட்டது.

அத்துடன் வன விலங்குகளை உயிருடன் எடுத்துச் செல்லும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   இதனால் சீனாவுக்கு 74 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.   குறிப்பாக தோல் மற்றும் தோலாடை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டதால் அரசு இந்த விதிகளைச் சற்றே தளர்த்தி வன விலங்குகளை எடுத்துச் செல்ல விதித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

இதையொட்டி மீண்டும் வனவிலங்கு பொருட்கள் விற்பனை ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக தொடங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.  சீனாவின் வன விலங்குகள் ஆர்வலரும் பல சமூக அமைப்புக்களின் தலைவருமான சுவோ ஜின்ஃபெங், “தற்போதுள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் சரியான விதிமுறைகள் இல்லை.   ஆன்லைன் வர்த்தகர்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யாவிட்டால் நம்மால் வன விலங்கு விற்பனையைக் கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு விதி முறைகளை பின்பற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கச் சீன அரசு அவர்களுக்குப் பரிசு அளித்து விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.  சட்டத்தில் உள்ள பல ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த ஆன்லைன வன விலங்கு வர்த்தகம் நடைபெறுகிறது.   அதைச் சரி செய்வதன் மூலம் மட்டுமே கடும் நடவடிக்கைகளை எடுக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.