வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த பிறகும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக் கவசம் அணியாமல் உள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதுவரை அங்கு 76.8 லட்சம பேர் பாதிக்கப்பட்டு 2.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  உயிர் இழந்துள்ளனர்..   தற்போது 25.7 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனாவால் பாதிக்க்ப்ட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று குணம் அடைந்து வெள்ளை மாளிகை திரும்பி உள்ளார்.

கொரோனா பரவுதல் பற்றி டிரம்ப் அதிக கவனம் கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உள்ளன.  தற்போது டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகும் அவர் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் போது 2.15 லட்சம் பேரைக் கொன்ற கொரோனாவைக் கண்டு அஞ்ச வேண்டாம் எனத் தெரிவித்து முகக் கவசம் அணியாமல் வீட்டுக்குள் நடமாடி வருகிறார்.

வீட்டுக்கு செல்லும் போதே டிரம்ப் முகக் கவசத்தை கழற்றி விட்டு தாம் நலமாக உள்ளதாகத் தெரிவித்து இரு கட்டை விரலையும் உயர்த்தி உள்ளார்.   அதன் பிறகு வீட்டுக்குள் நுழையும் போதும் அவர் முகக் கவசம் அணியவில்லை. அதிபரின் மருத்துவர் கான்லி அவர் முழுமையாகக் குணம் அடையவில்லை எனவும் இன்னும் தொற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.