டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் தேர்தல் ஆணையத்தின் சோதனைகளில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்டு வருகிறது

கடந்த 2016 ஆம் வருடம் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   ஆனால் வங்கிகளில் அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து ரொக்கமும் மாற்றப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.   அதனால் இனி கருப்புப் பணம் உண்டாக வழி இல்லை என கூறப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் சுமார் 303 கோடி அளவில் ரொக்கம் மற்றும் இதர பொருட்கள் தேர்தல் ஆணைய சோதனையில் பிடிபட்டன.   தற்போது கருப்புப் பணம் முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்திடம்  இதைவிட குறைவான பணம் இந்த 2019 தேர்தலில் பிடிப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால் உண்மை நிலை இதற்கு நேர் மாறாக உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒரிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பிடிபட்டுள்ள பொருட்களின் மதிப்பு ரூ.1,582  கோடியை  தாண்டி உள்ளது.  இதில் ரொக்கமாக ரூ. 377 கோடியைத் தவிர மது, உள்ளிட்ட பொருட்களும் பிடிபட்டுள்ளன.   இது கடந்த 2014 ஆம் வருடம் பிடிபட்டதைப் போல் 5 மடங்காகும்

இதுவரை பிடிபட்ட தொகை மட்டுமே இவ்வளவு எனும் போது கடைசி கட்ட வாக்கெடுப்பு நடக்க இன்னும் 6 வாரங்கள் உள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.    நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளிலும் ஏராளமான ரொக்கம் பிடிபட்டுள்ளது.

அது மட்டுமின்றி தேர்தல் விதிமீறல் புகார்களும் வந்த வண்ணம் உள்ளன.   இவற்றில் பெரும்பாலானவை ஆளும் பாஜகவினர் பற்றியே வருகின்றன.  குறிப்பாக பிரதமர் மோடி மீது அதிக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.   அவற்றில் நமோ டிவி தேர்தல் அறிவிப்புக்குப் பின் தொடங்கப்பட்டதும் ரெயிலில் நான் காவல்காரன் தேநீர் கோப்பைகள் அளிக்கப்பட்டதும் பெருமளவில் பேசப்பட்டு வருகின்றன.

தேநீர் கோப்பைகள் உடனடியாக தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டன.  ஆயினும் பாஜக மீது தேர்தல் ஆணையம் மற்ற கட்சிகளிடம் நடந்துக் கொள்வதைப் போல் கடுமையாக நடந்துக் கொள்வதில்லை என பல பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.