ரஃபேல் விமானம் : ரூ. 59000 கோடி பணம் அளித்தும் விமானம் கிடைக்க மேலும் தாமதம்

டில்லி

ரஃபேல் விமான கொள்முதலுக்காக இந்திய அரசு ரூ. 59000 கோடிக்கு மேல் முன் பணம் அளித்தும் விமானத்தை அளிக்க பிரான்ஸ் நிறுவனம் தாமதம் செய்து வருகிறது.

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட்டுடன் ரஃபேல் ரக போர் விமானம் கொள்முதல் செய்ய மோடி அரசு கடந்த 2016 ஆம் வருடம் ஒப்பந்தம் இட்டது. முதலில் முடிவு செய்யப்பட்ட 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் வாங்க மோடி அரசு முடிவு செய்து ஒப்பந்தம் இட்டது. அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்த புகாருக்கு இதுவரை மத்திய அரசு சரியான பதில் அளிக்கவில்லை

இந்த ஒப்பந்தப்படி டசால்ட் நிறுவனம் முழுமையாக பறக்க தயாரான 36 விமானங்களை நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022க்குள் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என உள்ளது. . இந்த விமானங்களுக்காக ஒப்பந்தப்படி ரூ.59000 கோடிக்கும் மேல் அதாவது 50 %க்கும் அதிகமான தொகையை இந்தியா ஏற்கனவே அளித்துள்ளது. ஆனால் டசால்ட் நிறுவனம் முதல் விமானம்  அளிக்க தாமதம் ஆகும் நிலை உள்ளது.

இந்த ஒப்பந்தப்படி முதல் 15% தொகையை இந்தியா ஒப்பந்தம் கையெழுத்தான உடன் செலுத்தி உள்ளது. அதன் பிறகு ரூ.34000 கோடி தவணை முறையில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சென்ற ஆண்டு இறுதியில் ரூ.13000 கோடி தொகை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு விமானங்கள் வந்ததும் 2022ல் அளிக்க வேண்டும்.

ஆனால் முதல் விமானம் தற்போது வரை பறக்கும் சோதனைகு தயாராகவில்லை. அந்த விமானத்தில் ஒரு சில மென்பொருட்கள் இன்னும் சரியாக அமைக்கப்படவில்லை என தகவல்கள் வந்துள்ளன. எனவே இந்த விமானம் தயாராகி இந்தியா வருவதற்கு வரும் 2022ஆம் வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் சோதனைக்கு ஆறு மாத காலம் ஆகலாம் என்பதால் இந்த கால நீட்டிப்பை நிறுவனம் அறிவித்துள்ளது.