சரக்கு விற்பனை,., ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட்…

இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் திக்குமுக்காடி நிற்கின்றன

கொரோனா பாதிப்பு குறைவதாலா? ம்..ஹும்..

இரண்டு தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட, மதுக்கடைகள், காமதேனுவைப் போல், அரசு கஜானாக்களை நிரப்புவதே, இந்த இன்ப அதிர்ச்சிக்குக் காரணம்.

40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கள் கிழமை  திறக்கப்பட்டன.

காலையிலேயே ஒவ்வொரு கடையிலும் 2 கி.மீ., 3 கி.மீ. என நீண்ட கியூ வரிசைகள்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாநிலமும் ’’வரலாறு’’ காணாத வசூல் சாதனை புரிந்து வருகின்றன.

இதில் பக்கத்து மாநிலமான கர்நாடகம் , நம்பர்-ஒன்.

சரக்கு கடை திறக்கப்பட்ட முதல் நாளில் அந்த மாநிலத்தில் 45 கோடி ரூபாய் வசூல் ஆனது.

இரண்டாம் நாளான நேற்று 197 கோடி ரூபாய்க்குச் சரக்கு விற்பனையாகியுள்ளது.

’இது ரிகார்ட் பிரேக்’’ என்று புளகாங்கிதம் கொள்கிறார்கள், கர்நாடக மாநில கலால் துறை அதிகாரிகள்.

அந்த மாநிலத்தில் கடந்த ( 2019) ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. அந்த மாநிலத்தில் ஒரே நாளில் அதிக தொகை வசூலானது அப்போது தான்.

அந்த ‘’சாதனை’’ நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தோஷத்தில்-

தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பது போல், அந்த மாநிலம் மதுபான விலையை 15 % அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

டெல்லி மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மது விலையை 75 % வரை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

– ஏழுமலை வெங்கடேசன்