பாலக்காடு : ஊரடங்கு தளர்த்தியும் 2 நாட்களாக வெளியே வராத மக்கள்

பாலக்காடு

ரடங்கு கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்ட போதிலும் கொரோனா பீதியால் பாலக்காட்டில் பொதுமக்கள் வெளியே வரவில்லை.

கொரோனா தொற்று கேரள மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்களில் நேற்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டன.   நேற்று முதல் பாலக்காடு மாவட்டத்தில் வங்கிகள், அரசு அலுவலகங்கள், சில தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல காலை 10 மணி முதல் மாலை 5 வரை இயங்கின.  ஆனால் பேருந்துகள் இயங்கவில்லை.

பல நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா அச்சம் காரணமாக இன்றும் நேற்றும்  மக்கள் அதிக அளவில் வரவில்லை.   பல சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை ஏற்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.   தனியார் வாகனங்களும் அதிக அளவில் இயங்கவில்லை.   பல இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.    பாலக்காடு பகுதியில் கோட்டப்பாடம், காரக்குறிச்சி, கஞ்சிரப்புழா ஆகிய இடங்களில் இன்னும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படவில்லை.