வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…

--

வெளிநாட்டு வேலையை உதறி வந்தவரால், தாயின் சடலத்தையும் காண இயலாத அவலம்…

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த அமீர்கான், 6 ஆண்டுகளுக்கு முன் துபாய் சென்று , பெரிய நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வந்தார்.

மார்ச் மாதம் ராம்பூரில் உள்ள  தாய்க்கு உடல்நிலை சரி இல்லை என அமீருக்குத் தகவல் வர, அப்போது ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டிருந்தது.

இந்தியா வருவதற்கு எந்த மார்க்கமும் இல்லை.

ஒரு வழியாக சில நாட்களுக்கு முன், துபாயில் வசிக்கும் ,புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்ட டெல்லி விமானத்தில் அமீருக்கு டிக்கெட் கிடைத்தது.

20 நாள் மட்டும் விடுமுறை கொடுத்தார்கள், ஆபீசில்.

‘’ தனிமைப்படுத்துதல் முகாமில் மட்டுமே 14 நாள் தங்க வேண்டும். 20 நாள் விடுமுறை போதாது’’ என்று கொஞ்சினார், அமீர்.

‘’அதற்கு மேல் லீவு கிடையாது’’ என்று கம்பெனி பிடிவாதம் பிடிக்க, வேலையை ராஜினாமா  செய்து விட்டு, சிறப்பு விமானத்தில் கடந்த 13 ஆம் தேதி டெல்லி வந்தார்.

14 நாள் ’’தனிமைப்படுத்துதல்’’ விதியின் காரணமாக ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமீர் தாயார், சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு.

அமீர், தனிமை படுத்துதலில் இருந்தாலும், தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி உள்ளது.

 ஆனால் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.

நோயுற்ற தாயைக் காண வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தவரால், தாயின் சடலத்தைக் கூட பார்க்க முடியவில்லை என்பது, விதியின் கொடூர விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

 – ஏழுமலை வெங்கடேசன்