தீர்ப்புக்குப் பின்பும் திருப்பி அனுப்பப்படும் ஆம் ஆத்மி அரசு கோப்பு

டில்லி

முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும்  சேவை அதிகாரிகளால் அரசு கோப்பு திருப்பி அனுப்பட்டுள்ளது.

டில்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான அதிகாரம் குறித்த வழக்கில் நேற்று உச்சநீதி மன்றம் டில்லி அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.   அந்த தீர்ப்பில் மாநில அரசுக்கு முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் அளித்தது.   அத்துடன் இனி ஆளுநரிடம் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் என கூறப்பட்டது.

அதை ஒட்டி நேற்று டில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு நேற்று சில மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து அந்தக் கோப்பை சேவை அதிகாரிகள் செயலருக்கு அனுப்பி வைத்தது.    அந்த கோப்பை ஒரு குறிப்புடன்  துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு அந்தச்  செயலர் திருப்பி அனுப்பி உள்ளார்.

அந்த குறிப்பில் ”மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2015ஆம் வருடம் மே மாதம் ஒரு அறிக்கை அளித்துள்ளது.   அந்த அறிக்கையை மாற்றி அமைக்கும் உத்தரவு வரும் வரை சேவைத்துறை யினால் மாநில அரசு உத்தரவை நிறைவேற்ற முடியாது.   அந்த அறிக்கை ஜனாதிபதியின் ஆணைப்படி உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.  அதனால் உள்துறை அமைச்சகம் மீண்டும் அந்த அறிவிப்பை ரத்து செய்யும் வரை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.