“கடவுளே முதல்வர் ஆனாலும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது” — கோவா முதல்வர் காட்டம்

பனாஜி :

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு சிறிய அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய திட்டத்தை அவர் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரமோத் சாவந்த் உரையாடினார்.

அப்போது பேசிய சாவந்த் “மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் அரசாங்க வேலை கொடுப்பது என்பது எந்த முதல்- அமைச்சராலும் இயலாத காரியம்.” என்று தெரிவித்தார்.

“நாளைக் காலையில் கடவுளே முதல்-அமைச்சர் ஆனாலும் 100 சதவீத பேருக்கும் அரசாங்க வேலை கொடுக்க அவரால் கூட முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

“கோவா மாநிலத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த வாய்ப்புகளை வெளியில் இருந்து வருவோர் தட்டி பறித்துக்கொள்கிறார்களே?” என பிரமோத் சாவந்த் கவலையுடன் தெரிவித்தார்.

– பா.பாரதி