‘’டாஸ்மாக்’’ கடைகளில் பாதி டோக்கன்கள் கூட  ‘விலை’ போகவில்லை..

5 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 660 ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

சித்திரை திருவிழாவுக்கு வருவது போல் பெரும் கூட்டம் திரண்டு வரும் என எதிர்பார்த்து பிரமாதமான ஏற்பாடுகளை ’டாஸ்மாக்’ கடைகள் முன்பு செய்திருந்தது, அதன் நிர்வாகம்..

குடிமகன்கள் வெயிலில் வாடி, வதங்கி விடக்கூடாது என்பதால், பல கடைகளில் ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. டாஸ்மாக் வளாகங்கள் சானிடைசர் மூலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் வீணானது தான் மிச்சம.
எந்த கடையிலும் கூட்டம் அலைமோத வில்லை.
ஒவ்வொரு கடையிலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் . விநியோகம் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிப்போடு அறிவித்திருந்தது.

ஆனால் சென்னை மற்றும் புறநகரில் சராசரியாக 300 டோக்கன்கள் அதாவது கிட்டத்தட்ட பாதி டோக்கன்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் கியூவை காண முடிந்தது. எஞ்சிய கடைகளில் 5 பேர்முதல் 10 பேர் வரை மட்டுமே கியூவில் நின்றனர்.

என்ன காரணம்?

வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 50 சதவீதம் பேர் தான் இங்குள்ள டாஸ்மாக் கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்தனர்.

கொரோனாவால் அவர்கள் வேலை இழந்து சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், சரக்கு கடைகள் ‘ களை ‘இழந்து காணப்பட்டதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் சோக கீதம் பாடினர்.

-பா.பாரதி.