ஒருநாளே என்றாலும்கூட பெருமை பெருமைதானே..! – மகிழ்ச்சியில் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: தற்காலிகமானது என்றாலும்கூட, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பதென்பது கவுரவமான ஒரு விஷயம் என்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

வரும் 8ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது இங்கிலாந்து அணி. ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில், அணியின் கேப்டன் ஜோ ரூட், தனது மனைவியின் பிரசவத்தின் பொருட்டு, விடுப்பில் செல்கிறார். எனவே, தற்காலிக கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

அவர் கூறியுள்ளதாவது, “அணியில் எப்போதும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென நினைப்பேன். தற்போது கேப்டன் என்பதால், எனது பாணி எதுவும் மாறிவிடப் போவதில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்க வாய்ப்பு கிடைப்பதென்பது கவுரவமான விஷயம். ஒருநாள் என்றாலும்கூட, நானும் கேப்டனாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா!” என்றார் பென் ஸ்டோக்ஸ்.