அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் வரையறை இல்லாமல் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளின் மூலம் உண்டாகும் புகை மண்டலத்தால், அம்மாநில கண்காணிப்பு மைய செயற்கைக்கோள்கள் திணறி வருகின்றன.

இந்த அதிர்ச்சியான நிகழ்வு குறித்து கூறப்படுவதாவது; பொது வெளிகளில் வேளாண் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை எரிக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஆனால், விதிகளை காற்றி பறக்கவிட்டுவிட்டு, அதே காற்றில் புகையையும் பறக்க விடுகின்றனர் விவசாயிகள்.

இதனால் பஞ்சாப் மாநிலத்தில் காற்று மாசுபாடு மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

விளைநில தீ விபத்துக்களை கண்காணிப்பதற்காக லூதியானாவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சாப் ரிமோட் சென்ஸிங் சென்டரின் செய்ற்கைக் கோள்களே திணறும் வகையில் அங்கே புகைக் கிளம்பியுள்ளது.

நவம்பர் மாதம் 1 மற்றும் 2 தேதிகளில் மட்டுமே மொத்தமாக 2856 விளைநிலங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்திருந்தாலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.