சென்னை:

300 வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.


சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பல வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. ஒரு வாக்குச் சாவடிக்கு குறைந்தபட்சம் 4 முகவர்கள் உள்ளனர்.

அவர்கள் வாக்கு எங்கே சென்றது? 300 வாக்குச் சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை. முகவர்கள் வாக்கு கூட பதிவாகாதது குறித்து தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை.

10 பேர் கட்சியை விட்டுச் செல்வதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல் யார் என்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும்.

திமுகவுக்கு சென்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றது அவருடைய புத்திசாலித்தனமாக இருக்கலாம். தேர்தலுக்கு தேர்தல் மக்கள் மனநிலை மாறும் என்றார்.