டெல்லியில் சிவசேனா ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..! சர்ப்ரைஸ் தந்த சஞ்சய் ராவுத்

மும்பை: நாளையே டெல்லியில் சிவசேனா ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அக்கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார்.

மகாராஷ்டிராவில், பெரும்பான்மையை நிரூபிக்காமல் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியதால், புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க வழி பிறந்தது.

அடுத்த ஒரு சில நாட்களில் அவர் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக முறைப்படி பதவியேற்க உள்ளார். இந் நிலையில் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அக்கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவுத்.

அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று தொடக்கம் முதலே சொல்லி வருகிறேன். உத்தவ் தாக்கரே தான் மகாராஷ்டிராவின் முதலமைச்சர்.

அந்த தருணங்களில் எல்லாம் என்னை பார்த்து பலர் சிரித்தனர். ஆனால், இப்போது நான் சொன்னது தான் நடந்திருக்கிறது. கூடிய விரைவில் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தாலும் அமைப்போம், ஆச்சரியம் வேண்டாம் என்றார்.

சிவசேனா பதவியேற்பு விழாவில், கலந்து கொள்ள பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அழைக்கப்படுவார்கள் என்றும் சஞ்சய் ராவுத் கூறினார்.