evening-news
அங்கீகாரம் பெறாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு: உயர்நீதிமன்றம். அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என அகில இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச்சங்க கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அக்டோபர் 21-ம் தேதி வரை இடைக்கால உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கு தொடுத்தால் அக்டோபர் 21-ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இராமநாதபுரத்தில் விளை நிலங்கள் பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளதை திரும்பிப் பெறக் கோரி இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலரிடம் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோரிக்க மனு அளித்தனர்.
வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் தூங்கிய யானைகள். வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட்டில், நேற்று காலை முதல் மாலை வரை 7 யானைகள் குட்டியுடன் உலா வந்தது. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபட்ட யானைகள் பின்னர் அங்கேயே படுத்து துாங்க ஆரம்பித்து விட்டன. 4 யானைகள் படுத்து தூங்கிய நிலையில், மற்ற யானைகள் நின்றபடியே குட்டித் தூக்கம்போட்டன. தொடர்ந்து காலை முதல் ஒரே இடத்தில் யானைகள் முகாமிட்டிருந்ததால் தோட்ட பணிகள் பாதிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் சாவகாசமாக எழுந்த யானைகள், வனப்பகுதியை நோக்கி சென்றன. தேயிலை தோட்டத்துக்குள் யானைகள் தூங்கியதால் தொழிலாளர்கள் வேறு தோட்டங்களுக்கு பணிக்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடியை சந்திக்கிறார் தங்கமகன் மாரியப்பன்: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் டெல்லியில் இன்று மாலை பிரதமரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் மின்உற்பத்தி தொடக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 3-ம் தேதி தொழில்நுட்ப கோளாறால் 170 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பழுது சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா சிறப்பான தொடக்கம்! இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இது இந்திய அணி விளையாடும் 500-வது டெஸ்ட் போட்டியாகும். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷமி ஆகிய பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்தார்கள்.
போட்டி நடைபெறவுள்ள கான்பூர் மைதானத்தில் பந்துகள் அதிகளவில் ஸ்விங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. அடுத்தடுத்த தினங்களில் மைதானம் முழுமையாக பெளலர்களுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதால், டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தாலிக்கு தங்கம்:ஜெ வழங்கினார்:  பயனாளிகளுக்கு திருமண நிதியுதவிகளை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 12,500 பயனாளிகளுக்கு தங்கம் வழங்கும் அடையாளமாக ஆர்.கே. நகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்
பண்ருட்டியில் ரூ.10 லட்சம் செலவில் காந்தி மண்டபம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அருகே காந்தி பூங்கா உள்ளது. இதில், சுமார் 5 அடி உயரம் உடையக் காந்தி சிலை 1950-வாக்கில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. பராமரிப்பு இல்லாமல் மண்டபத்துடன் சாய்ந்த நிலையில் இருந்த காந்தி சிலையை பண்ருட்டி நகர நிர்வாகம் நேராக நிமிர்த்தி பூங்காவை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
காணாமல்போன ஏ.என்-32 ரக விமானம் தேடும்பணி நிறுத்தம்: சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம் காணாமல்போன விமானத்தின் பாகங்களை கடலில் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாகர்நிதி ஆய்வுக் கப்பலால் ஆழ்கடல் பகுதியில் தேடும் பணியை தொடங்க முடியவில்லை. கடற் சீற்றம் காரணமாக ஆழ்கடலில் ஆளில்லா தேடல் கருவியை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் சந்தேகப்படும் 54 இடங்களில் 6 இடங்களில் விமானத்தைதேட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தோனே சியாவில் கனமழை: பலி 23:  இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை மதிக்குமா? வைகோ கேள்வி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை மதிக்குமா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சச்சின் தானாக ஓய்வு பெறவில்லை.. கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பியுள்ளனர்..! ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வு பெறவில்லை. அவர் ஓய்வு பெறாவிட்டால் நாங்களே நீக்கியிருப்போம். அதை உணர்ந்துதான் அவரே ஓய்வு முடிவை எடுத்தார் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் தேர்வாளர் குழு தலைவர் சந்தீப் பாட்டீல்.
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்: மத்தியப் பிரதேசம் மாநிலம் சீந்துவா என்ற இடத்தில் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 25 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரி தாக்குதல்: 3 நாட்களுக்கு முன்பே ராணுவத்துக்கு புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை: உரி பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே, இந்திய புலனாய்வு அமைப்பு ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதவி பறிப்பு: அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: ஈரோடு மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர் முரளிதரன். ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆவின் பால் கடை நடத்தி வருகிறார். இவர் மீது புகார் போனதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுக்குழு பதவியில்இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதனை கண்டிக்கும் வகையில் முரளிதரன் எம்.ஜி.ஆர். சிலை இன்று தீக்குளிப்பதாக அறிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் போட்டி அரசியல்தான் நடக்கிறது. மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு மதிப்புஇல்லை என கூறி மண்ணெண்ணெய் கேனுடன் அரசு மருத்துவமனையில் திடீரென தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். இதனால் ஈரோடு அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்: ஜெயலலிதா திறந்தார்: இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) லிமிடெட் நிறுவனத்தால் ரூ.4536 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
உரி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை: உரி தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உத்திர பிரதேச மாநிலம் ஜலானில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்தனர்.
ஜெய்சால்மரில் இந்திய விமானப் படையின் ஆளில்லா விமானம் விழுந்து விபத்து: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய விமானப் படையின் ஆளில்லா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தொடர் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி: அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முதுநிலை டிப்ளமோ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பிஇ: முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை (நீட்) தேசிய மருத்துவ தேர்வு வாரியம் (என்பிஇ) நடத்தவுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வில் கால அவகாசம் நீட்டிப்பு:  உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான கடைசி தேதி செப்., 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகளிர், ஆதி திராவிடர்களுக்கான வார்டுகள் இன்னும் அறிவிக்கப்படாததால், கால அவகாசம் செப்.,24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சப்தஸ்வரத்தை ரசித்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்: நெல்லையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்).,தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த மூன்று நாட்களாக நெல்லையில் முகாமிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். நேற்று வியாழக்கிழமை காலையில் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். காலையில் வந்த அவருக்கு திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், முருகன் ஆகியோர் சால்வையணிவித்து வரவேற்றனர். கோயில் கொடிமரம் முன்பாக யானை காந்திமதி, ஆசீர்வாதம் செய்து வரவேற்றது.
தொடர்ந்து காந்திமதி அம்மன் சன்னதி, ஆறுமுகநயினார் சன்னதி, நெல்லையப்பர் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் மேற்கொண்டார். கோயில் ஊழியர் ரவிபட்டர், மோகன் பகவத்திற்கு, கோயிலின் தலபுராணம், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நுழைவு சிற்பங்கள் போன்றவற்றை விளக்கிக்கூறினார். சுவாமி சன்னதி முன்பாக உள்ள இசைத்தூண்களில் எழும் சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் ஒலி அமைப்பினை தூண்களை தட்டி அவருக்கு விளக்கினர். இசையினை காது கொடுத்து கேட்டு மகிழ்ந்தார்.
சுமார் அரைமணிநேர தரிசனத்திற்கு பிறகு நிகழ்வுகள் நடக்கும் மண்டபம் நோக்கி கிளம்பினார். மோகன் பகவத்திற்கு இசட் பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்:  கச்சத் தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் ஹவில்தார் மதன் லால் உடலுக்கு அவரது மகள்கள் இறுதி மரியாதை:  ஜம்மு காஷ்மீரில் நவ்காமில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பஞ்சாப் மாநிலம் காரோடாவை சேர்ந்த ஹவில்தார் மதன் லால் உடலுக்கு அவரது மகள்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு: மாலையில் தீர்ப்பு: சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன்: சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். தற்போது ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தங்களது சார்பில் மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமசிவம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் இன்று இந்த வழக்கு 3வது நீதிபதியாக கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் என்று நீதிபதி கிருபாகரன் அறிவித்தார்.
மருத்துவமனையை சேதப்படுத்தியதாக சோம்நாத் பார்தி கைது:  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானுத்துலா கான் கைதாகி இரண்டு நாட்களாகியுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய சோம்நாத் பார்தி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. ஆந்திர கடற்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்:  தமிழக காங்., திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்கிறது. கருணாநிதி, ஸ்டாலினை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சந்தித்தேன். ராம்குமார் தற்கொலை தொடர்பாக சந்தேகம் உள்ளது என்றார்.
மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை:  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் 21ம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து மழை பெய்யும் என்றும், அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை கழக இணை செயலர் ராஜீவ் நிவாத்கர் கூறியுள்ளார்.
கோவையில் ரூ.3.93 கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளை: பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆய்வாளர் உட்பட 6 பேர் கைது. கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை. இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தகவல்.
மாணவி கலைவாணியின் பிசியோதெராபி படிப்புக்கான முழு செலவையும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதட்டம்: இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை! எல்லையில் பதட்டம் தணிய வாய்ப்பில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன். போர் மேகம் சூழ்ந்து காணப்படும் இந்நிலையில் யூரி தாக்குதலுக்கு பதிலுக்கு பதிலாக இந்திய இராணுவத்தினர் தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கைகளில் மிக தீவிரமாக உள்ளனர்.
பிரிக்ஸ் கருத்தரங்கு விழாவை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்: பிரிக்ஸ் கருத்தரங்கு விழாவை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் தொடங்கி வைத்தார்.சிறந்த நடைமுறைகள் மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பு குறித்து இந்த கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
கர்நாடக ஆளுநருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு: கர்நாடக ஆளுநர் வி.ஆர். வாலாவுடன் முதல்வர் சித்தராமையா சந்தித்தார். காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம் நாளை நடக்கிறது.
கருணாநிதி உடன் ராம்குமார் தந்தை சந்திப்பு கிடையாது: வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசியல் ரீதியாக சர்ச்சை ஏற்படும் என்பதால் சந்திப்பு நடைபெறவில்லை என தகவல்.
நவாசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்:  அமெரிக்காவின் நியூ யார்க்கில் ஐநா சபை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பயங்கரவாதத்திற்கு ஆதரவு பேசியுள்ளார். இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அமெரிக்க நண்பர்கள், சிந்தி மற்றும் பிற குழுக்கள் ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
ஐம்முவில் துப்பாக்கி சண்டை:  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். தேனையடுத்து துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டி – இந்தியா பேட்டிங்:  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டி இந்தியா விளையாடும் 500வது டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராத் கோஹ்லி தலைமையில் வலுவாக உள்ள இந்திய அணி,  நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும் என தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி கான்பூரிலும், 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலும், 3வது டெஸ்ட் போட்டி இந்தூரிலும்  நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் சாலைமறியல்: திண்டுக்கல் 41வது வார்டு யூசுப்பியா நகர் மக்கள் குடிநீர் கேட்டு திண்டுக்கல் – வத்தலகுண்டு சாலையில் மறியல் செய்தனர்.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம் (22-09-16)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 23.35 அடி
நீர் வரத்து : 154.98 கன அடி
வெளியேற்றம் : 204.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 46.16அடி
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 54.96 அடி
நீர் வரத்து : 2 கன அடி
வெளியேற்றம் : 145 கன அடி
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தஞ்சாவூர் மானாமதுரை இரண்டு வழி சாலை அமைப்பதற்க்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கும் போது ஒப்பந்ததாரர் இடிக்க வந்ததால் கிராம மக்கள் சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
பச்சையப்பன் கல்லூரிக்கு விடுமுறை 70 பேர் சஸ்பெண்ட்: சென்னை பச்சையப்பன் கல்லூரிக்குள் 5 மாணவர்கள் கத்தியுடன் வந்த விவகாரத்தில், கல்லூரியில் இருந்து சுமார் 70 மாணவர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கத்தியுடன் 5 பேர் கல்லூரியில் நுழைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோதலை தடுக்கும் வகையில், கல்லூரிக்கு இன்று பிற்பகல் முதல், நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 ஆத்தூர் வழியாக ஈரோடு சென்னைக்கு பகல் நேர இரயில்… ஈரோட்டில் இருந்து சென்னை எழும்பூர் வரை பகல் நேர இரயில் இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. இந்த வண்டி காலை 5 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு, சேலத்திற்கு 6.00 மணிக்கும், ஆத்தூருக்கு 7.20 – மணிக்கு வந்து சேரும் இவ்வண்டி மதியம் ஒரு மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. சிறப்பு கட்டண அடிப்படையில் இயங்கும் இந்த வண்டி திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு – சேலம்- ஆத்தூர்- சென்னை சிறப்பு ரயில் ஒரு மாத சோதனை ஓட்டம்தான்…என்றாலும் மக்களின் வரவேற்பை பொறுத்து நீட்டிக்க வாய்ப்புண்டு.. இந்த இரயில் வாழப்பாடியில் நின்று செல்ல அரசியல் வாதிகளும், ரயில்வே நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியும், வாழப்பாடி தாலுகாவிற்கு அங்கீகாரம் கிடைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை.
சட்டசபையை கூட்டுகிறது கர்நாடகா:  காவிரி விவகாரம் பற்றி ஆலோசிக்க 24ம் தேதி சிறப்பு சட்டசபையை கூட்டுகிறது கர்நாடக அரசு. கர்நாடக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அனுமதி கோரி அம்மாநில ஆளுநரை சித்தராமையா நேரில் சந்தித்தார். அதுபோல  தமிழகத்திலும் சிறப்பு சட்டசபையை கூட்டுமாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சிபிஐ விசாரணை ஸ்டாலின் வலியுறுத்தல்:  டெல்லியில் மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்.
 
சத்தீஸ்கர் கோர்பா பாதுகாப்பு படையினர் சுட்டதில் சிறுவன் பலி.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பெயர் புகைப்படத்தை அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கப்பட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்கில் கிங் பிஷர் நிறுவன தலைமை நிதி அதிகாரி ரகுநாதனுக்கு 18 மாதம் சிறை – ஐதராபாத் கோர்ட்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீரை மலர்த்தூவி வரவேற்ற தமிழக விவசாயிகள்.
கர்நாடகாவில் தமிழக லாரிகளை பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம்.
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மோடிக்கு ரத்த கடிதம்:  எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதி இளைஞர்கள் ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளனர்.
எந்த காரணமுமின்றி கருவை கலைக்க பெண்ணுக்கு அதிகாரம் – மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு.
காவிரி விவகாரத்தில் மவுனம் காத்தால் பிரதமர் வீட்டு முன் போராட்டம் – விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை.
நீலகிரி, குன்னூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் கண்காணிப்பு பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.40க்கு பதில் இரவு 9 மணிக்கு புறப்படும் இணை ரயில் தாமதமாக வந்து கொண்டிருப்பதால் புறப்படும் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே.
தமிழகத்தில் 186 பெண் எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு தென் மண்டலத்தில் 16 பேர் இன்ஸ்பெக்டர்கள் ஆனார்கள்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றதையொட்டி, நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக திருநாவுக்கரசர் இன்று காலை சந்தித்தார்.
செங்கம் அருகே ரூ.3000 லஞ்சம் பெற்ற காவலர்கள் கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை.
ரூ. 4 கோடி ஹவாலா பணம் பங்கீடு பற்றி போலீஸ்காரர்கள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது பணம் பரிமுதலின் மூளையாக செயல்பட்டவர் கரூர் மாவட்டம் பரமத்தி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆவார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.