அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான போர்: மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் என அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறினார்.

இதுகுறித்த அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள டாக்டர்களில், 7 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார்.  கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில், அவர்கள் போர் வீரர்களை போல செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வைரஸ், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மறைந்து விட கூடியது அல்ல.  தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை, அதை முழுமையாக ஒழிக்க முடியாது.

எனவே ஊரடங்கு தடை உத்தரவுகளை, படிப்படியாக, மிகுந்த கவனத்துடன் தளர்த்த வேண்டும். இல்லையெனில், வைரஸ் தொற்று அனைத்து நாடுகளையும் மீண்டும் தாக்க துவங்கும். அதன் பாதிப்புகள், இப்போது இருப்பதை விட, மிக மோசமாக இருக்கும் என்று கூறினார்.