டில்லி:

மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்று பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் சாஜி நாராயணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் தொழிற்சங்க தலைவரான சாஜி நாராயணன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவுட்லுக் இந்தியாவில் அவர் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், ‘‘பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் விஷயங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்ததை விட வேறு ஒன்றையும் மத்திய அரசு செய்யவில்லை. இந்திய பொருளாதாரம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறது. பிரச்னைகளை அடையாளம் காணுதல், முன்னுரிமை அளித்தல், அவற்றை அலசி ஆராய மேற்கொண்ட நடவடிக்கைகள், அவற்றுக்கான தீர்வுகள் மேற்கொண்டது ஆகியவை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை.

இந்த நடவடிக்கை தோல்வியை தழுவிய மேற்கத்திய முதலாளித்துவத்தின் மாதிரியாக உள்ளது. மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் பணக்காரர்கள் தான் பயனடைந்துள்ளனர். ஏழைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது பதவியில் இருந்த அதிகாரிகளே திரும்பவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு நிதி ஆயோக் ஏற்படுத்தியது தவறு. தாராளமயமாக்கல் கொள்கையால் கடந்த 1991ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சி தான் ஏற்பட்டு வருகிறது. தற்போதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குதல் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியாவின் சிறு, நடுத்தர தொழிற்சாலைகள், சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமேசான், ஃபிலிப்கார்ட், ஸ்னாப்டீன், ஜாபங், மைன்த்ரா, ஷாப்க்ளூஸ் போன்ற இ வணிக நிறுவனங்களில் வருகையால் உள்ளூர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஓலா மற்றும் உபர் நிறுவனங்களில் வருகையும் இதே நிலையை தான் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட கால திட்டமாக விவசாயம்ல தொழில் துறைகளு சேவை துறை துணையாக இருக்க வேண்டும்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘நாட்டில் பொருளாதார வளர்ச்சியை 5 விஷயங்கள் தான் முடக்கி போட்டுள்ளது. அதில், முதலாவதாக இந்தியாவின் மக்கள் தொகை வறுமை கோட்டிற்கு அருகில் அல்லது அதற்கு கீழ் உள்ளது. இரண்டாவது, விவசாய நெருக்கடி. 3வது சுதந்திரம் பெற்றது முதல் நாட்டின் உற்பத்தி துறை மெதுவான வளர்ச்சியை கொண்டுள்ளது. 4வது 1950ம் ஆண்டு முதல் நாட்டில் பெரிய அளவில் வர்த்தக பற்றாகுறை உள்ளது. வேலையில்லா திண்டாடட்டம் 5வது பிரச்னையாக உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் வரும் நவம்பர் 17ம் தேதி மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றம் நோக்கி நேரணி நடத்துகிறார். பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை தொடர்ந்து தற்போது நாராயணனும் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.