எல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்
நெட்டிசன்
-மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல்பதிவு…
சிறுமிகளின் மார்பகத்தை ஆடைகளோடு தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வராது.
– மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
12 வயது சிறுமியின் மார்பகங்களை தவறான நோக்கத்தில் தொட்டார் என்ற குற்றத்தின் செஷன்ஸ் நீதிமன்றம் 39 வயது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்பைத்தான் இப்போது உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருக்கிறது..
குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை தந்திருப்பவர் ஒரு பெண் நீதிபதி.
தோல் மீது தோல் பட்டு நடத்தப்படும் தாக்குதல் மட்டுமே பாலியல் குற்றம் என்பது நீதிபதியின் பார்வையாக இருக்கிறது..
நாளைக்கே ஒரு வழக்கில் பீனிட்ரேஷன் என்ற கட்டத்தில் மனித உறுப்பு பயன்படுத்தப்படாமல் வேறு ஒரு திடப்பொருள் திணிக்கப்பட்டு தாக்குதல் நடந்தால் அதெல்லாம் பாலியல் தாக்குதலில் வராது என்று இதே நீதிபதி சொல்வார் போல..
பாவம் பெண் நீதிபதி.. நாட்டு நடப்பை அறியாதவர் போல..
மாநகர ரயில்களிலும் பேருந்துகளிலும் கடுமையான கூட்டநெரிசல் மிக்க இடங்களிலும் மாட்டிக் கொண்டு முன்னும் பின்னும் நகர முடியாமல் தத்தளிக்கும் பெண்களுக்கு நேரும் ஒருவிதமான கொடுமை இருக்கிறது..
ஏதோ ஒரு சந்தேகம் உறுத்த, தங்களது தங்களது பின்பக்கத்தில் சேலையை தொட்டுப்பார்த்தால்.. ஏதோ ஒரு காமுகன் அந்த சில வினாடிகள் நேரத்தை பயன்படுத்தி செய்து விட்டு போன இழிவான காரியத்தின் லேசான எச்சம்..
இன்றும் நன்றாக நினைவிருக்கிறது நேரடி சம்பவம்.. சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு.. சென்னை பாண்டிபஜார் வழியாக கடக்கும் 47a பேருந்து..
ஒரு கயவனின் இடிபாடுகளால் தனது சேலைக்கு ஏதோ களங்கம் என உணர்ந்த ஒரு பெண்மணி, அவமானத்தில் கூனிக்குறுகி அழுதார். சக பெண்களிடம் அவர் ரகசியமாக சொன்னபோதுதான் நடந்த கொடூரம் தெரிய வந்தது. மாட்டிய பார்ட்டிக்கு தர்மஅடி.. விட்டுவிடுங்கள் என்று அவன் கெஞ்சினான்..
தினமும் வேலைக்கு சென்று திரும்பும் அந்தப் பெண்மணி போலீஸ், கேஸ் என்று போனால் தனக்கு குடும்பத்தில் பிரச்சினை வரும் என்று அத்தோடு விவகாரத்தை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியதுதான் இன்னும் பரிதாபம்..
இந்தத் தாக்குதல் ஸ்கின் டூ ஸ்கின் என்ற கேட்டகிரியில் வராது. அதனால் பாலியல் தாக்குதல் ஆகாது என்று இதே நீதிபதி சொன்னாலும் சொல்வார்போல..
பெண்கள் மீதான திட்டமிட்ட பாலியல் தாக்குதல்களுக்கு மரண தண்டனை அவசியம் என்று நாடே போய்க்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற தீர்ப்புகளை படிக்கும்போது தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது..
ஆடை மூடிய அங்கத்தை தொடுவதற்கும் ஆடை மூடாத அங்கத்தை தொடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று கண்டுபிடித்த பெண் நீதிபதிக்கு நாம் சொல்ல வேண்டியது ஒரே வரிதான்..
பாய்ஸனை பச்சையாக கொடுத்தால் என்ன? பாலில் கலந்து கொடுத்தால் என்ன?