3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி:

3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு உள்ளர்ர்.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் 9372 பேர். அவர்களில் 4495 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4766 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 111 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, இன்று தடப்பள்ளியிலுள்ள முகாம் அலுவலகத்தில் உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்குவதுடன், பரிசோதனை முடிவுகளின் விவரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கியூஆர் சுகாதார அட்டைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியவர், மேலும் சோதனை செய்ய வேண்டிய நபர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு 104 அவசர ஊர்தி வாகனம் ஒதுக்கி, அதன்படி கிராமம்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும், யாரைக் கலந்தாலோசிக்க வேண்டும், எங்கு ஒருவர் பரிசோதனை செய்ய முடியும் என்பது பற்றிய தகவல்களை அதிகாரிகள் விரிவாக தெரிவிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாதிரி சேகரிப்பு மையங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும்,  வரும் 90 நாட்களுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும்  அதிரடியாக உத்தரவிட்டவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எந்தவொரு அதிகாரியும்,  களங்கப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.