நில அப்ரூவலுக்கு சதுரஅடிக்கு ரூ.3 லஞ்சம் வாங்கும் தமிழக அமைச்சர்: ஈவிகேஎஸ் ‘சரவெடி’

நில அப்ரூவலுக்கு சதுரஅடிக்கு ரூ.3 வீதம் லஞ்சம் வாங்கும் தமிழக அமைச்சர்

மோடியை விட அதிகமாக புகழ்ந்து ஜால்ரா தட்டும் திருநாவுக்கரசர்

கோஷ்டி பூசல்கள் இயற்கையானது

வலுவான நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி

தமிழகத்தில் பாஜ  ஒரு ‘லெட்டர் பேட்’ கட்சி

தமிழகத்தில் நில அப்ரூவலுக்கு சதுரஅடிக்கு ரூ.3 வீதம் தமிழக அமைச்சர் லஞ்சம் வாங்கி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு அசராமல் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்த  தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ரஜினி, கமல் மற்றும் தற்போதைய அரசியல், தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை மற்றும் பாஜக குறித்தும் தனது சரவெடி கருத்துக்களை கூறினார்.

செய்தியளரின் பல்வேற கேள்விகளுக்கு பதில் தெரிவித்தவர்,  தேர்தலில் எங்களுக்கும் ஊழல் கட்சியான அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என்றும், நடைபெற உள்ள 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும்  அ.தி.மு.க. டெபாசிட்டை இழக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டியவர்,  நில அப்ரூவலுக்கு சதுர அடிக்கு ரூ.3 அமைச்சரே லஞ்சம் வாங்குகிறார் என்றும்,  நாகரீகமாக, விஞ்ஞான ரீதியில் இந்த கொள்ளை நடக்கிறது… நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக தன்மீது அவதூறு வழக்கு போட்டால் போடட்டும் என்றும் கூறினார்.

ரஜினி கமல் அரசியல் குறித்த கேள்விக்கு, கமல் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் மதசார்பற்ற கொள்கை உடையவர். காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பது வரவேற்கத்தக்கது என்றவர், ரஜினி  தனது படங்கள் வரும்போது மட்டுமே அரசியல் பேசுவார், அவர்  கட்சி தொடங்க மாட்டார் என்றும், அந்த நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு குறித்த கேள்விக்கு,  தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மாற்று நாங்கள் தான் என்று பாரதிய ஜனதா கட்சியினர் சொல்லி வருவது வேடிக்கையாக இருக்கிறது என்றவர்,  தமிழ்நாட்டை பொறுத்த வரை அது ஒரு ‘லெட்டர் பேட்’ கட்சிதான்  என்றார்.

மோடி வெளியே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நிலைமை என்ன? தமிழக பாரதிய ஜனதாவுக்கு தமிழிசை சரியான தலைவர்தான் என்றவர், அவரிடம் செய்தியாளர்கள்  எதை கேட்டாலும் எதையாவது பேசுகிறார் என்று நக்கலடித்தார்.

தற்போதைய  குறிக்கோள் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும். அதற்காக மத சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்றும் தெரிவித்தார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விககு,  நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தொகுதி பங்கீடு காரணமாக எந்த பிரச்சனையும் வராது என்று உறுதிப்பட கூறினார்.

காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு பதில் அளித்த இளங்கோவன்,  ஜனநாயக நாட்டில் ஜனநாயக  முறையில் இயங்கும் எல்லா அரசியல் இயக்கங்களிலும் கருத்து வேறுபாடுகள், கோஷ்டி பூசல்கள் இருக்கத்தான் செய்யு… அது இயற்கையானது… காங்கிரஸ் கட்சியில்  மட்டும் தான் கோஷ்டி பூசல் உள்ளது என்று சொல்ல முடியாது என்று தெளிவு படுத்தினார்.

தற்போது காங்கிரசில் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், பொறுப்பில் இல்லாத உண்மையான காங்கிரசாருக்கும் இடையேதான் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதை கட்சி மேலிடம் சரி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தவர்,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசரை நியமித்த போது எல்லோரும் ஏற்றுக்கொண்டோம். ஆனால் அவரது நடவடிக்கைகள் செயல்பாடுகள் காங்கிரஸ் கலாச்சாரத்துக்கு ஒத்துவரவில்லை என்று கூறினார்.

மேடைகளில் பேசும் திருநாவுக்கரசர்,  இன்று நான் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் முதல்-அமைச்சர் ஆகி யிருப்பேன். பா.ஜனதாவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரை தமிழக காங்கிரஸ் கட்சி  தலைவராக வைத்துள்ளோம். இதன் காரணமாகத்தான்,  கட்சிக்காக உண்மையாக உழைத்து வரும் தொண்டர்கள் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மேலிடத்தில் தெரிவித்து இருக்கிறார்கள் என்றார்.

தனக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே  தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும்,  நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் என்றார். அதேவேளையில், அது வேறு இது வேறு என்றவர், திருநாவுக் கரசர்   கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றபிறகு சரி வர  செயல்படவில்லை…. அதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றவர் திருநாவுக்கரசர் பேசியதை நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்,  , காங்கிரசுக்கு எதிரி கட்சியான பா.ஜனதா தலைவர் வாஜ்பாயை மோடியை விட அதிகமாக புகழ்ந்து ஜால்ரா தட்டியிருக்கிறார்.  வாஜ்பாயை புகழ்ந்ததில் தவறு இல்லை என்றாலும், அதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசுக்கு  யாரும் நெருக்கடி  கொடுக்கவில்லை என்று கூறிய இளங்கோவன்,  ஆரம்பம் முதல் இன்று வரை அவருக்கு காங்கிரஸ் ‘மைன்ட்’ இல்லை. அதனால்தான் எல்லா தலைவர்களும் அவரை நீக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். மாற்ற வேண்டியது அவசரமானது. அவசியமானது என்றும் வலியுறுத்தி பேசினார்.

மேலும்,  தமிழகத்தில் காங்கிரஸ் 3-வது பெரிய பலமான கட்சியாக இருக்கிறது. இதை பலப்படுத்த வேண்டிய அளவுக்கு பலப்படுத்தவில்லை. பலவீனப்படுத்தும் வகையில் செயல்படுவதைத்தான் எதிர்க்கிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு,  தி.மு.க-காங்கிரஸ் இடையே உள்ள கூட்டணி  வலுவான கூட்டணி என்றவர், தேர்தல் கூட்டணி குறித்து ராகுலும், மு.க.ஸ்டாலினும் பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.

இவ்வாறு  இளங்கோவன் கூறினார்