பெங்களூரு:

மத்திய அரசு வழங்கிய ஒவ்வொரு ரூபாய் நிதியுதவிக்கு கணக்கு தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ஜெகதீஸ் ஷெட்டருக்கு இது நன்றாக தெரியும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மத்திய அரசின் நிதியுதவியை செலவு செய்ததற்கு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சமீபத்தில் கூறியிருந்தார். கர்நாடகாவுக்கான நிதி ரூ.88,583 கோடியில் இரு ந்து ரூ.2,19,506 கோடியாக மத்திய அரசு உயர்த்தியது. இதற்கான செலவு கணக்குகளை சித்தராமையா வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு சித்தராமையா பதில் கூறியுள்ளார். அதில்,‘‘பணம் எங்கே சென்றது?. இதற்கு பதில், பாசனம், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், ரெயில்வே பாதைகள், பயிர் காப்பீடு, விவசாய கடன் தள்ளுபடி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான பாஜக.வை சேர்ந்த ஜெகதீஸ் ஷெட்டருக்கு இது நன்றாக தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ இந்த நிதி ஒன்றும் சிறப்பு ஒதுக்கீடு கிடையாது. இவை பட்ஜெட்டில் இணை க்கப்பட்டது தான். பொய் சொல்லி மக்களை முட்டாளாக்குவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான அனைத்து கணக்குகளும் சட்டமன்றத்தில் 15 அமர்வுகளில் விவாதம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தூங்கி கொண்டிருந்ததா?. 15 அமர்வுகளிலும் பாஜக உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?. அதனால் மக்களை முட்டாளாக்குவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது மத்திய திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.