டோக்கியோ ஒலிம்பிக் – எதிர்வரும் ஒவ்வொரு நாளும் வினேஷ் போகாட்டிற்கு சவாலானதே!

மும்பை: நகர்ந்து செல்லும் ஒவ்வொரு நாளும் முக்கியமானதாகவும் சவால் நிறைந்ததாகவும் உள்ளதாக கூறியுள்ளார் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்.

கடந்த 2016ம் ஆண்டு பிர‍ேசிலின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வினேஷ் போகாட்,

காலிறுதிப்போட்டியில் பங்கேற்றபோது கால் மூட்டில் காயம் ஏற்பட்டு, வெளியேறியதால் அவரின் பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் இந்த ஆண்டு தனக்கு மீண்டும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக போகாட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53கிகி எடைப்பிரிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வியட்நாமை வீராங்கனையை வென்று வினேஷ் போகாட் வெண்கலம் வென்றுள்ளார். இதையடுத்து அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது, “நாட்டிற்காக போட்டியிட்டு கோப்பையை வெல்வது மிகப்பெரிய விஷயம், இந்த போட்டி மூலம் என்னுடைய நிறைகுறைகளை கண்டறிய முடிந்தது. குறைகளை நிவர்த்திசெய்து ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வருகிறேன்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக உள்ள ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் சவால் நிறைந்ததாகவும் உள்ளது. என்னுடன் மோதவுள்ள எதிரணி வீரர்களின் திறமைகள் குறித்தும், அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் என்னுடைய பயிற்சியாளருடன் இணைந்து நான் திட்டமிட்டு வருகிறேன்” என்றார் அவர்.