Random image

வெற்றிவேல் பெற்ற வாக்குகள் எல்லோருக்குமே வியப்பாக உள்ளது: டிடிவி தினகரன் பேச்சு

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் அமமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதில் சென்னை மாவட்டத்தில் அமமுக மாபெரும் வெற்றி பெறவேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒன்று பட்டு உழைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இந்த கூட்டம் இன்றைக்கு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே நடந்த பாராளுமன்றத் தேர்தல் பற்றியும், இடைத்தேர்தல் பற்றியும் சொன்னார்கள். எதனால் வெற்றியை இழந்தோம், தமிழ்நாடு முழுவதும் 10 பூத்களில் அ.ம.மு.க 0 வாக்குகள் வாங்கியிருக்கிறது. என்னவென்று பார்த்தால் எனக்கு தெரிந்து, அதில் 99 சதவீதம் எல்லா பூத்களிலும் நிர்வாகிகள் குறிப்பாக அங்கிருக்கின்ற நமது நிர்வாகிகள் மகனோ அல்லது நிர்வாகியோதான் பூத் ஏஜெண்டாக இருந்தார்கள்.

ஒரு சில பூத்களில் டவுனை ஒட்டியுள்ள இடங்களில் பழமையான, வசதியான பகுதிகளில் மட்டும் அந்த பகுதியில் உள்ளவர்களை நியமிக்காமல் பக்கத்தில் உள்ளவர்களை பூத் ஏஜெண்ட்டாக நியமித்தார்கள். மற்றபடி இந்த தொகுதியை பற்றியெல்லாம் அந்த பரமாத்மாக்களுக்குத்தான் தெரியும். வருங்காலத்தில் இதையும் தாண்டி நாம் வெற்றி பெறுவோம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெ. அணியாக செயல்பட்ட போது அம்மா மீது அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இதுபோன்ற அவதூறுகளை எல்லாம் தாண்டிதான் ஒரு இயக்கம் வளர முடியும். இவ்வளவு தாக்கிப் பேசுகிறார்கள் என்றால், ‘பழுத்த பழம் தான் கல்லடி படும்’. பெரிய தொண்டர் படையும், மக்கள் ஆதரவும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் இவர்கள் நமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பது யதார்த்தம். இவைகளை புரட்சித் தலைவர், அம்மா பார்த்தது. அவைகளையெல்லாம் பார்த்துத்தான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

சில பேர் சொல்கிறார்கள், இவர் தலைவரா ? அம்மாவா ? என்று. அப்படி சொல்லவில்லை. அவ்வளவு பெரிய தலைவர்களே சந்தித்தது. அதைபோன்றுதான் நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை பொதுச் செயலாளராக ஆக்கியுள்ளீர்கள். நானும் உங்களைப் போல ஒரு தொண்டன்தான். இவர்கள் பொதுச்செயலாளர் என்று சொல்லும் போது கூட யாரையோ சொல்கிறார்கள் என்றுதான் நினைத்துக் கொள்வேன். அதன் பின்னர் தான் என்னை சொல்கிறார்கள் என்று நினைப்பேன். ஏனெனில் நாம் எல்லாம் அம்மாவைத்தான் பொதுச்செயலாளர் என்று சொல்லி வந்துள்ளோம்.

நம்மை குறைகூறுபவர்கள் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அமமுக என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே எதற்கு என்று உங்களுக்குத் தெரியும். அமமுக என்பது ஆயுதம், ஜனநாயக ஆயுதம். ஆயுதம் என்றால் கத்தி, ஈட்டி, துப்பாக்கியை நான் சொல்லவில்லை. ஜனநாயக ஆயுதம். இந்த கட்சி இருந்தால் தான், கட்சியை பதிவு செய்கின்ற வேலையில் இருக்கிறோம். பதிவு செய்ததும் நமக்கென்று ஒரு சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்தில் போட்டியிட்டுதான் நாம் வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையை பெற்று அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான ஆயுதம்தான் அமமுக என்பதுதான் உண்மை. இதில் ஒரு அடி கூட நான் பின்வாங்கமாட்டேன். தலைவர் காலத்தில் தலைவருக்கு கருணாநிதிதான் எதிரியாக இருந்தார். அம்மாவுக்கும் கருணாநிதிதான் எதிரியாக இருந்தார். ஆனால் நமக்கு அதையும் தாண்டி அவதாரங்கள் எல்லாம் நமக்கு எதிரியாக இருக்கிறது.

நாம் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இங்கே இருக்கின்ற அரசாங்கம் எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகிறது, எப்படியெல்லாம் அவர்களுக்காக அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. கடைசியில் நாம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறோம். மார்ச் 26ம் தேதி மனு தாக்கல் செய்யும் போது கூட இரண்டு மனுக்கள் பூர்த்தி செய்து வைத்திருந்தார்கள். ஒன்று சுயேட்சையாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சின்னம். அதையும் தாண்டி அந்த நேரத்திலேயும் நம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் எல்லா தொகுதியிலும் போட்டியிட நமது வேட்பாளர்கள் தயாராக இருந்தார்கள். மனு தாக்கல் செய்வதற்காக அந்தந்த அலுவலகங்களில் தயாராக இருந்தார்கள்.

அன்று மதிய நேரத்தில் தான் உங்கள் கட்சியை அங்கீகரிக்க முடியாது. ஒரே சின்னம் தரமுடியாது என்றும் சுயேட்சையாகத்தான் போட்டியிட வேண்டும். ஆனால் நீங்கள் எல்லாம் ஒரே சின்னத்தில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்ன காரணத்தினால்தான் ஒரே சின்னம் கிடைத்தது. அதில் இங்கிருந்து சென்ற பரம்பரை அதிமுகவினர் என்று சொல்லிக் கொண்டு நினைவிடத்தை பாதுகாப்பவர்கள் எல்லாம் எங்களையெல்லாம் கலந்து பேசவில்லை என்று சொல்கிறார்கள். எப்படி கலந்து ஆலோசனை செய்ய முடியும் ? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மார்ச் 27ம் தேதி அன்று நான் ராயபுரத்தில் இருந்து தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கினேன். என்ன சின்னம் என்ன என்றே எனக்கு தெரியாது. பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் தேர்தலில் போட்டியிட்ட போது, 7 ஆயிரம் வாக்குகள் தான் கிடைக்குமா ? என்பது எல்லோருக்கும் வியப்பாக உள்ளது. அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும்.

கிருஷ்ணர், அர்ச்சுனர், அதாவது அவதார புரு‌ஷர் கிருஷ்ணரை பற்றியோ, மகாபாரதத்தில் மாவீரர் அர்ச்சுனன் பற்றியோ நாம் பேசக்கூடாது. ஆனால் சிலர் பேச வைக்கிறார்கள். அந்த மகாபாரதத்தில் சூழ்ச்சிகள் நிறைய நடைபெற்றது. துரியோதனனுக்கு அமாவாசை அன்று தேதி கொடுப்பார் சகாதேவன். அமாவாசையே இல்லாமல் செய்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும். அதுபோல எலக்ட்ரானிக் ஓட்டு மி­ஷினே இல்லாமல் செய்திருக்கிறார்கள் சில இடங்களில். அதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் சிலர் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் மனதில் உள்ளதை, தனக்கு தெரிந்ததை எப்படியோ சொல்லிவிடுவார்கள். அது தான் உண்மை. வருங்காலத்தில் தெரியும்” என்று தெரிவித்தார்.