மும்பை:

மாட்டு இறைச்சி சாப்பிடுவது என்பது அவரவர் உரிமை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தள்ளார்.

நாக்பூரில் மாட்டு இறைச்சி வைத்திருந்தாக கூறி ஒரு முஸ்லிம் நபர் தாக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ அனைவருக்கும் மாட்டு இறைச்சி சாப்பிட உரிமை உள்ளது. ஆட்டு இறைச்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் மக்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். அதற்காக பசு பாதுகாவலர்கள் மனிதர்களை சாப்பிடக்கூடாது’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ வன்முறையில் ஈடுபடும் பசு பாதுகாவலர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது. உ.பி. சட்டமன்றத்தில் வெடி பொருட்கள் கண்டறியப்பட்ட விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நாடாளுமன்ற தாக்குதலை போன்ற சம்பவம் இது. இதில் யோகி ஆதித்யாநாத்தை கொலை செய்யும் சதி திட்டம் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தீவிரவாதிகள் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 31 வயதான ஒரு முஸ்லிம் மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக கூறி பசு பாதுகாவலர்களால் பொது இடத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டர் என்பது குறிப்பிடத்த க்கது.