புதுடெல்லி: ஊழல் கறைபடிந்த தெலுங்குதேச கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் மட்டும் உத்தமர்களாக ஆகிவிடுவார்களா? இதுதான் பாரதீய ஜனதாவின் அரசியல் பாதையா? என்று விளாசியுள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.

மாயாவதி கூறியுள்ளதாவது, “மத்திய அரசின் சார்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பல வாக்குறுதிகளை நாட்டிற்கு வழங்கியுள்ள நேரத்தில், பாரதீய ஜனதா இதுபோன்ற கட்சி உடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ராஜ்யசபாவில் உள்ள தெலுங்கு தேசத்தின் 6 உறுப்பினர்களில் 4 பேரை இழுத்து, அந்த அவையில் தெலுங்குதேச கட்சியின் இருப்பையே இல்லாமல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா.

இந்த நான்கு பேரில், இருவரை, ஊழல் கறைபடிந்தவர்கள் என ஏற்கனவே விமர்சித்த கட்சிதான் பாரதீய ஜனதா. தற்போது, அந்த இருவரும் கட்சி மாறியவுடன் புனிதர்களாகி விட்டனரா?

பாரதீய ஜனதா வழிபட்ட அரசியலில் அனைத்துமே சரியானதுதான். எதுவுமே தவறில்லை போலும்” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் மாயாவதி.