மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி 

டில்லி:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எக்சிட் போல் வெளியானதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத் தில் முறையிட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாஜக வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்ற முயற்சி செய்வதாகவும், ஏற்கனவே 2 லட்சம் மின்னணு இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாக வும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ’வாக்காளர்களின் தீர்ப்பில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களை கவனித்து வருகிறேன். நமது ஜனநாயகத்தின் வேர்களுக்கு சவால்விடும் யூகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது.

மக்களின் தீர்ப்பு மிகவும் புனிதமானது. அதில் எள்முனையளவு சந்தேகத்துக்கும் இடமளித்துவிட கூடாது. நமது நாட்டின் உயரிய அமைப்புகளின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் இந்த அமைப்புகளின் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு அவற்றில் பணியாற்றுபவர்கள் கையில்தான் உள்ளது.

தேர்தல் கமிஷன் என்னும் உயரிய அமைப்பின் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு மற்றும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்புக்கு தேர்தல் கமிஷன் பொறுப்பேற்க வேண்டும்.  அவர்கள் அவ்வாறு செய்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி