காந்திநகர்

குஜராத் முதல் கட்ட தேர்த்லில் ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரமும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரமும் பரிசோதனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல தேர்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாகவும் அதனால் ஆளும் கட்சி பயன் அடைவதாகவும் பல முறை புகார்கள் எழுந்துள்ளன.  சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகித்த இடங்களில் பா ஜ க அமோக வெற்றி பெற்றதாகவும் வாக்குச் சீட்டு உபயோகித்த இடங்களில் அவ்வாறு இல்லை எனவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டும் இயந்திரம் மூலம் வழங்கப்பட உள்ளது. எனவே அதையொட்டி ஆங்காங்கே ஒரு சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் குஜராத் மாநில நாளிதழ்களில் அரசியல் கட்சிகள் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதற்கு முன்பாக 2015ஆம் வருடம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பாஜக நாளிதழில் வெளியிட்ட ஒரு விளம்பரம் மற்ற கட்சிகளிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  இதைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்தன.  மீண்டும் எந்தச் சர்ச்சையும் நேரிடாமல் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது