திகார் சிறையில் முன்னாள் ராணுவ அதிகாரி  மரணம் அடைந்ததில் சீன  பின்னணி உள்ளதா?

டில்லி

திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி மரணத்தில் சீன பின்னணி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கனடா வாசியான முகேஷ் சோப்ரா ராணுவத்தின் பாரசூட் படையில் லே பகுதியில் பணி புரிந்தவர் ஆவார். அவர் 1983 ஆம் வருடம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவர் அதன் பிறகுத் தனது மனைவி மற்றும் மகளுடன் கனடா சென்றுள்ளார்.  அங்கு அவர் அமெரிக்க பாஸ்போர்ட் பெற்றுள்ளார். தற்போது 64 வயதாகும் கடந்த 31 ஆம் தேதி ஹாங்காங் வழியாக இந்தியா வந்துள்ளார்.  அவரை ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வரவேற்றுள்ளார்.

டில்லி கண்டோன்மெண்டில் தங்கி இருந்த முகேஷ் சோப்ரா அங்கிருந்த மானெக்‌ஷா நூலகத்தில்  சில அரிய புத்தகங்களைத் திருடி உள்ளதாக கூறப்படுகிறது.  அதையொட்டி அவரை நவம்பர் மாதம் 2 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவருடன் நடந்த விசாரணையில் தாம் ராணுவத்தில் பணி புரிந்தது மற்றும் ஓய்வு எற்று கனடாவில் வசிப்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு சத்தர்பூர் மற்றும் கைலாஷ் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளதையும் ரூ.65 கோடி வைப்பு நிதி உள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார்.   அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டில் அவ்ருக்கு 2025 வரை செல்லத்தக்கச் சீன விசா வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் ஒரு சில சீனர்கள் பெயரையும்  தொலைப்பேசி எண்களையும் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.  கடந்த 2007 முதல் அவர் 15 முறை இந்தியாவுக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரை சோதனை செய்தபோது அவரிடம் 30000 அமெரிக்க டாலர் ரொக்கமாகவும் தங்க நகைகளும் கிடைத்துள்ளன.   அவரிடம் இருந்த 4 மொபைல்களில் அவர் சீனாவில் உள்ள பலரிடம் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.   முகேஷ் சோப்ரா கடந்த ஆறாம் தேதி அன்று திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் அடுத்த நாள் மரணம் அடைந்தார்.

இதையொட்டி வழக்கறிஞர் தீபக் தியாகி முன்னாள் ராணுவ அதிகாரி சோப்ராவின் மரணத்தில் சந்தேகமுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  காவல்துறையினர் முகேஷ் சோப்ரா சீனாவுக்காக உளவு  பார்த்ததாகவும் அவர் மரணத்தில் சீனாவின் பின்னணி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.  அதே வேளையில் திகார் சிறை அதிகாரிகள் சோப்ரா சிறை கட்டிடத்தில் இருந்து குதித்து மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர் தியாகி, “சீன அரசுக்காக அவர் உளவு பார்ப்பதாக சந்தேகம் இருந்தால் அவரை கடுங்காவல் சிறையில் வைத்திருக்க வேண்டும்.   ஆனால் அவ்வாறு செய்யவில்லை.  அத்துடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை” எனத தெரிவித்துள்ளார்.