ராகேஷ் அஸ்தானா : முதல் தகவல் அறிக்கைக்கு முன் ஒப்புதல் தேவையில்லை – அரசு வழக்கறிஞர்

டில்லி

சிபிஐ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதிய முன் ஒப்புதல் தேவை இல்லை என முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி எஸ் நரசிம்மா ஏற்கனவே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே மோதல் முற்றியது. அலோக் வர்மா தனது விசாரணையில் தேவையின்றி தலையிடுவதாக அஸ்தானா புகார் அளித்தார். இந்நிலையில் ஒரு வழக்கில் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது லஞ்ச ஒழுப்பித் துறை முதல் தகவல் அறிக்கை பதிந்தது. மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது.

சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது குற்றப்பத்திரிகை பதிவதற்கு முன்பு அமைப்பின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு சிபிஐ தற்போது அளித்துள்ள பதிலில், “இது குறித்து ஏற்கனவே முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி எஸ் நரசிம்மாவிடம் அதிகாரியின் பதவி மற்றும் பெயரைக் குறிப்பிடாமல் விளக்கம் பெறப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

நரசிம்மா தனது விளக்கத்தில், ”விதி என் 17ஏ வின் படி சிபிஐ அதிகாரிகள் மீது முன் விசாரணைக்கான முதல் தகவல் அறிக்கையை பதிய முன் அனுமதி பெறத் தேவை இல்லை. ஏற்கனவே கடந்த 2014 வருடம் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. புகார் வந்த உடனே முன் விசாரணைக்காக பதியப்படும் முதல் தகவல் அறிக்கை எனப்படும் குற்றப்பத்திரிகைக்கும் நீதிமன்றத்தில் பதியப்படும் குற்றப்பத்திரிகைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எனவே அந்த விதி இதற்கு பொருந்தாது” என கூறி உள்ளார்.

அதை ஒட்டி முன் தகவல் அறிக்கை என்னும் குற்றப்பத்திரிகையை முன் விசாரணைக்காக ராகேஷ் அஸ்தானா மீது பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.