இன்னொரு  காதல் திராவகம்! காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீச்சு!

இளைஞர் ஒருவர், தான் விரும்பிய  பெண்ணை காதலித்த வருமானவரித்துறை அதிகாரி மீது ஆசிட் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகரில் மத்திய வருவாய்துறை குடியிருப்பில் வசிப்பவர் மோகித்(23) . நுங்கம் பாக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம்  தேதி இரவு மோகித் வீட்டிற்குள் புகுந்த இருவர், அவர் மீது திராவகத்தை வீசி விட்டு தலைமறைவாகிவிட்டனர்.

மோகித்
மோகித்

முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த மோகித், தற்போது தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீச்சு தொடர்பாக மோகித் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து
திருமங்கலம் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும்பணி நடந்தது.

விசாரணையில்  சென்னை கே.கே.நகர் , 10 வது செக்டரில் வசிக்கும் கணேசன் என்பவரது மகன் பிரபு (30) வை தனிப்படை கைது செய்தது.

விசாரணையில் பிரபு தெரிவித்ததாவது:

பிரபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்துள்ளனர். .

இதற்கிடையே  சில மாதங்களுக்கு முன்பு பிரபு, அந்த பணியை விட்டு விலகி, தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நேரத்தில் பிரபுவுக்கும் , அவரது காதலிக்கும் இடையில் மோகித்  வந்திருக்கிறார்.  அந்த இளம்பெண்ணும், பிரபுவை புறக்கணித்துவிட்டு, மோகித்தை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதையறிந்த  பிரபு  அந்த பெண்ணிடம் பேச முற்பட,  அவர்  பிரபுவை அவமானப்படுத்தி இருக்கிறார். மேலும், “நான் மோகித்தைத்தான்  காதலிக்கிறேன். இனி என்னுடன் பேச முயற்சிக்காதே” என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

இதனால், “மோகித்தானே நம் காதலியை அபகரித்தார்” என்று ஆத்திரப்பட்டு மோகித் மீது ஆசிட் வீசியிருக்கிறார். இதில் பிரபுவுக்கு துணையாக சென்று ஆசிட் வீச்சில் ஈடுபட்ட அவரது நண்பர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பிரபு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி, பெட்ரோல் ஊற்றிக் கொல்வது  போன்ற சம்பவங்கள் சமீபத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. இப்போது காதலன் மீது முன்னாள் காதலன் ஆசிட் வீசி அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.