டில்லி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு முன்னாள்  சிபிஐ அதிகாரியின் வாக்குமூலத்தினால் முக்கிய பாயிண்ட் ஒன்று கிடைத்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப் பட்ட குண்டு வெடிப்பதற்கான பேட்டரிகளை இவர் வாங்கிக் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  தற்போது  உச்ச நீதி மன்றத்தில்  ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன் அப்போது நிகழ்ந்த விசாரணை பதிவு பற்றி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் “அப்போது 19 வயதானவராக இருந்த அறிவு என அழக்கப்படும் பேரறிவாளன்  தான் 9 வோல்ட் பேட்டரி இரண்டு வாங்கிக் கொடுத்ததாகவும் ஆனால் அது எதற்கு வாங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது எனவும் கூறினார்.  ஆனால் நான் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் போது பேட்டரிகள் எதற்காக வாங்கப்பட்டது என்பது அவருக்கு தெரியாது என்பதை பதிவு செய்யாமல் விட்டு விட்டேன்.   நான் அப்போது பதிவு செய்தது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஆனால் நான் இந்த வரிகளை பதிவு செய்தால் அவர் குற்றம் இழைக்கவில்லை என்னும் பொருள் வரும் அதனால் நான் அதை பதிவு செய்யவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தனது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இது குறித்து மத்திய அரசு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா ம க தலைவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “பேரறிவாளனுடைய வாக்குமூலம் தவறாக பதியப் பட்டதை சிபிஐ முன்னாள் அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார்.  எனவே பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்” என பதிந்துள்ளார்.   பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ”முன்னாள் சி பி ஐ அதிகாரியின் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.  இதுவே எனக்கு என் மகன் பாதி விடுதலை ஆனதைப் போல் உள்ளது.  வரும் பொங்கலுக்குள் பேரறிவாளன் விடுதலை ஆகி விடுவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.