டில்லி

முன்னாள் நீதிமன்ற பெண் இடைநிலை உதவியாளர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கபட்டுள்ளார். ரஞ்சன் கோகாய் அலுவலகம் அவருடைய இல்லத்தில் அமைந்துள்ளது. அவருடைய அலுவலகத்தில் இணை நிலை உதவியாளராக ஒரு 35 வயதுப் பெண்மணி பணியாற்றி வந்தார். அந்த பெண் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் தனது மனுவில், “கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி அன்று என்னிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல் சீண்டலில் ஈடுபட்டர். அவர் எனது இடுப்பை இழுத்து கட்டிப்பிடித்தார். எனது உடல் முழுவதும் தொட்டார். அத்துடன் எனது உடலுடன் அவர் உடலை வைத்து அழுத்தினார். என்னை கட்டிபடி என கூறி அவருடன் இணைத்து பிடித்துக் கொண்டார்.

நான் பயத்தினால் உறைந்து போனேன். எனது உடலை கடுமையாக்கிக் கொண்டு அவரை விட்டு விலகி ஓடி வந்தேன். அதன் பிறகு என்னை அவர் வீட்டில் உள்ள அலுவலகப் பணியில் இருந்து நீக்கி விட்டனர். இரு மாதங்கள் கழித்து டிசம்பர் 21 அன்று என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர். இதற்கு நான் இரு தினங்கள் சொல்லாமல் விடுமுறை எடுத்தை காரணம் காட்டினார்கள்.

அது மட்டுமின்றி டில்லி காவல்துறையில் தலைமை காவலர்களாக பணிபுரியும் எனது கணவர் மற்றும் மைத்துனரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 2012 ஆம் வருடமே முடிந்த ஒரு வழக்குக்காக அவர்கள் 2018 ஆம் வருடம் டிசம்பர் 28 அன்று பணியிடை நீக்கம் செய்யபட்டனர். அது மட்டுமின்றி இந்த வருடம் ஜனவரி 11 அன்று என்னை ஒரு காவல்துறை அதிகாரி ரஞ்சன் கோகாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ரஞ்சன் கோகாய் மனைவி என்னை தரையில் விழுந்து வணங்கி அவர் பாதத்தில் எனது மூக்கை தேய்த்து மன்னிப்பு கேட்குமாறு சொன்னர். நானும் இந்த்மன்னிப்பு எதற்கு எனவே தெரியாமல் மன்னிப்பு கேட்டேன். ஆனாலும் எனது உடல் ஊனமுற்ற மைத்துனரை ஜனவரி 14 ஆம் தேதி காரணம் கூறாமலே பணி நீக்கம் செய்யப்பட்டார்

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி நானும் என் கணவரும் ராஜ்ஸ்தான் மாநிலத்தில் உள்ள எங்கள் சொந்த ஊருக்கு சென்றோம். நாங்கள் ரூ.50000 கடன் வாங்கி த்ருப்பி தராததாக புகார் வந்துள்ளதாக தெரிவித்து எங்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். நான், என் கணவர், மைத்துனர், அவர் மனைவி, ஒரு உறவினர் ஆகியோரை அழைத்துச் சென்று அடித்து உதைத்தனர். எங்களுக்கு 24 மணி நேரம் உணவு, நீர் எதையும் அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.