டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா தற்போது காவல்துறை துணை ஆணையராக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான ஜோகிந்தர் சர்மா எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொண்டதில்லை.  ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 4 போட்டிகளில் கலந்து கொண்டு நான்கிலுமே நன்கு விளையாடிப் புகழ் பெற்றுள்ளார்.  கடந்த 2007 டி 20  சர்வதேச போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

அந்த போட்டியில் கடைசி ஓவரில் பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்த ஜோகிந்தர் சர்மா ஹரியானா மாநில காவல்துறையில் கடந்த 2007 அக்டோபர் மாதம் இணைந்து பணி புரிந்து வருகிறார்.  தற்போது காவல்துறையில் துணை ஆணையராகப் பணி புரிந்து வரும்  இவர் கொரோனா தடுப்பு பணியில் இரவு நேர ஊரடங்கைக் கண்காணித்து வருகிறார்.

இவரது தற்போதைய புகைப்படம் சமூக வலைத் தளங்களில் பலராலும் பரப்பப்படுகிறது.   டிவிட்டரில் அந்த புகைப்படத்துடன், “டி 20 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் பந்து வீச்சாளர் டி சி பி ஜோகிந்தர் சர்மா கொரோனா ஊரடங்கு பணி. செய்து வருகிறார்.   இது கம்பீரை விட சிறப்பானதாகும்” எனப் பதியப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய அரசியல் வாதியுமான கவுதம் கம்பீர் கொரோனா குறித்து எவ்வித பணியும் செய்யவில்லை எனப் பலரும் இதே பாணியில் கிண்டல் செய்து வருகின்றனர்.