விஷால் மனு நிராகரிப்பு : முன்னாள் தேர்தல் ஆணையர் சரமாரி கேள்வி

சென்னை

விஷால் தன்னை முன் மொழிந்தவர்களை சந்தித்து அவர்கள் உண்மையானவர்களா என ஆராய்ந்துள்ளாரா போன்ற பல கேள்விகளை  முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி எழுப்பி உள்ளார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களில் இருவர் தாங்கள் முன் மொழியவில்லை என தெரிவித்துள்ளனர்.  அதனால் அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.    அதன்  பின்  அவரது வேண்டுகோளை அடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது.   பிறகு வேட்புமனுவை மறு பரிசீலனை செய்ய கோரியதை மட்டுமே  ஏற்றதாக மறுப்பு வந்தது.   கடைசியாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வந்தது.    இந்த குழப்பங்கள் பற்றி செய்தித்தாள் ஒன்றுக்கு முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் அவர், “இந்த இடைத்தேர்தலில் 70கும் மேற்பட்ட  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.   ஆனால் ஊடகங்கள் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதில் மட்டும் சந்தேகம் கொள்வதால் தான் பிரச்னை வருகிறது.  நீங்கள் அவரை பிரபலமானவர் என பார்க்கிறீர்கள்.    ஆனால் தேர்தல் ஆணையம் அவரை வேட்பாளராக பார்க்கிறது.

விஷால் தன்னை முன்மொழிந்த 10 பேரையும் சந்தித்தாரா? அல்லது யாரையாவது அனுப்பி கையெழுத்து வாங்கினாரா?  தன்னை முன் மொழியும் 10 பேரையும் சந்தித்து அவர் ஏன் உறுதிப் படுத்திக் கொள்ளவில்லை?  10 பேரில் இருவர் நேரடியாகப் போய் தாங்கள் கையெழுத்து இடவில்லை என்றால் ஆணையம் யாரை நம்பும்?  கையெழுத்து வாங்கியதாகச் சொன்னவர் சொல்வதை எப்படி நம்பும்?  சம்பந்தப்பட்டவர் சொல்வதைத் தான் நம்பும்.

சம்பந்தப்பட்டவர் நேரில் வந்து நான் கையெழுத்திடவில்லை என்றதற்கு மேல் ஆணையம் எதுவும் செய்யமுடியாது.   அவரிடமே நீங்கள் அந்த 10 பேரையும் சந்தித்தாரா எனக் கேளுங்கள்.   அப்படி சந்தித்திரா விட்டால் அவர்களைக் கூட பார்க்காத அவர் எல்லாம் ஒரு வேட்பாளரா?    தன்னை முன் மொழியும் பத்து பேரையும் அவர் சந்தித்திருந்தால் தற்போது வேட்புமனு நிராகரிப்பை சந்தித்திருக்க மாட்டார்.

வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்களை முன் மொழிபவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.   புதிதாக வருபவர்களுக்கு அதை கவனிக்க வேண்டும் என்பது தெரிவதில்லை.    தேர்தலில் போட்டி இட ஆசைப்படுபவர்கள் இது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.