டில்லி

மின் துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நிதிச் செயலர் என்பது அரசின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும்.   இந்த பதவி வகிப்பவர் அரசின் மிகவும் மூத்த அதிகாரி என்னும் அந்தஸ்தில் உள்ளவராக திகழ்வார்.   இந்த பதவியில் கடந்த 2018  முதல் சுபாஷ் சந்திர கர்க் இருந்து வந்தார்.  இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 1983 ஆம் வருடம் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

இதற்கு முன்பு சுபாஷ் சந்திர கர்க் பொருளாதார விவகார செயலராக பதவி வகித்து வந்தார்.  தற்போது மத்திய அரசு இவரை மின் துறைச் செயலராக இடமாற்றம் செய்துள்ளது.  இதுவும் செயலர் பதவி என்றாலும் நிதிச் செயலர் அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி இல்லை எனக் கருத்து நிலவி வருகிறது.   இந்த இட மாற்ற உத்தரவு நேற்று முன் தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்க் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற மனு செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.    ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மற்றும் கர்க் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படாமல் உள்ளது.   சக்தி வாய்ந்த பதவியில் பணி புரிந்த கர்க் சற்று கீழான பதவியில் பணி புரிய விரும்பவில்லை  என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி அரசு முதல் முறையாகப் பதவி ஏற்றதும், அப்போதைய நிதிச் செயலரான அரவிந்த் மாயாராம் சுற்றுலாத்துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.