டில்லி

திக மதிப்புள்ள நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆன நிலையில் புதிய ரூ.2000 நோட்டுக்களைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் கூறி உள்ளார்.

இந்திய அரசின் நிதிச் செயலராக பணிபுரிந்து வந்த சுபாஷ் சந்திர கர்க் மின் துறைச் செயலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டார்.  இவர் இந்த பணி மாற்றத்தை எதிர்த்து விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்தார்.  கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியுடன் இவர் பணியில் இருந்து விலகி உள்ளார்.   சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான இவர் சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது  ரூ.1000 நோட்டு விலக்கப்பட்டு அதற்குப் பதிலாக முதல் முறையாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.  அதையொட்டி ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூ. 2000 நோட்டுக்கள் தற்போது அதிகமாகப் புழக்கத்தில் இல்லை.

இது குறித்து கர்க் தனது அறிக்கையில், ”தற்போது ரூ.2000 நோட்டுக்கள் அதிக அளவில் புழக்கத்தில் காணப்படுவதில்லை.  பெரும்பாலான நோட்டுக்கள் பதுக்கப்பட்டிருப்பதால் அந்த நோட்டுக்களைக் கண்களால் காணவும் முடியவில்லை.  எனவே எவ்வித தயக்கமும் இன்றி ரூ..2000 நோட்டுக்களைச் செல்லாததாக அறிவிக்கலாம்” எனக் கூறி உள்ளார்.

ஏற்கனவே ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாததாக அறிவிக்கப்பட்ட போது மக்கள் கடும் துயர் அடைந்த நிலையில் மூன்று வருடங்களில் புதிய நோட்டுக்களையும் செல்லாதது என அறிவிக்கும் இந்த பரிந்துரையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்,