முதலிரவு அறைக்குள் புகுந்து ‘மாஜி’ காதலன் மனைவியின் முடியை கத்தரித்து ‘பழி தீர்த்த’ இளம்பெண்..

 

பாட்னா :

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மோரா தாலப் கிராமத்தை சேர்ந்த கோபால்ராம், தனது ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பக்கத்து ஊரை சேர்ந்த பெண்ணுக்கும், கோபாலுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

பெற்றோர் பேச்சை தட்ட முடியாமல் அந்த பெண்ணையே கோபால் ராம் கல்யாணம் செய்து கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை மணப்பெண் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது. அன்றே மணமக்கள், மோரா தாலப் கிராமத்துக்கு திரும்பி விட்டனர்.

காதலனின் திருமண செய்தி அறிந்த கோபாலின் காதலி கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். கோபாலின் தங்கையுடன், அவள் நட்பாக பழகி இருந்ததால், அவர்கள் வீட்டிலேயே அன்று இரவு அந்த பெண் தங்கினாள்.

பக்கத்து அறையில் மணமக்கள் தனியாக இருந்த நேரத்தில் குடும்பத்தார் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவில், அந்த இளம்பெண் முதலிரவு அறைக்குள் புகுந்து, புதுப்பெண்ணின் தலைமுடியை கத்தரித்துள்ளார். மேலும் தான், கொண்டு சென்றிருந்த ‘பெவிகால்’ பசையை புதுப்பெண்ணின் கண்ணில் ஊற்றி இருக்கிறாள்.

வலி தாங்க மாட்டாமல் புதுப்பெண் அலறிய சத்தம் கேட்டு, பக்கத்து அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், அங்கு ஓடி வந்துள்ளனர். தலைமுடி துண்டிக்கப்பட்டு, கண்ணில் பசை கொட்டப்பட்ட நிலையில் துடித்துக்கொண்டிருந்த புதுப்பெண்ணை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இந்த கொடூரத்தை நிகழ்த்தி விட்டு, தப்பி ஒட முயன்ற மாப்பிள்ளையின் மாஜி காதலியை பிடித்து, தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அவள் போலீசில் ஒப்படைக்கப்பட்டாள்.

பாவம் புதுப்பெண்.

கண்ணில் காயங்களுடன் அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அவருக்கு கண் பார்வை போய் விடும் என டாக்டர்கள் கூறியுள்ளதால், புது மாப்பிள்ளை பித்து பிடித்தவர் போல் காணப்படுகிறார்.

– பா. பாரதி