கொல்கத்தா

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

நீதிபதி கர்ணனை உச்சநீதிமன்றம் பணியிட மாற்றம் செய்தது.   ஆனால் அந்த பணியிட மாற்றத்துக்கு அவரே தடை விதித்து தீர்ப்பு வழங்கிக் கொண்டார்.   இதனால் உச்சநீதிமன்றம் இவருக்கு வழக்குகள் ஒதுக்கக் கூடாது என ஆணை இட்டது.  அதற்கு நீதிபதி கர்ணன் தாம் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பழிவாங்கப் படுவதாக தெரிவித்தார்.    மேலும் உச்சநிதிமன்றத்தின் மீது சரமாரியாக குற்றம் சுமத்தினார்.  இதை ஒட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்த உச்சநீதிமன்றம் அவருகு 6 மாத சிறை தண்டனை வழங்கியது.

நேற்று கொல்கத்தாவில் தனது புதிய கட்சியை கர்ணன் தொடங்கி உள்ளார்.  கட்சிக்கு “ஊழலுக்கு எதிரான கட்சி” எனப் பெயர் சூட்டி உள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் கர்ணன், “வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எனது கட்சி சார்பில் முழுவதுமாக பெண் வேட்பாளர்களை போட்டியிட வைக்க உள்ளேன்.   விரைவில் எனது கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட உள்ளது.

எனது கட்சியின் ஒரே நோக்கம் நாட்டிலுள்ள ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும்.   உத்திரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் (மோடியின் தொகுதி) ஒரு பெண் வேட்பாளரை எனது கட்சி சார்பில் போட்டியிட வைக்கப் போகிறேன்.  தற்போது நாடு முழுவதும் தலித்துகள் மீதும் சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  அவர்களை அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும் எனது கட்சி வலியுறுத்தும்” என தெரிவித்துள்ளார்.