நெல்லை:

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி,  அவரது கணவர் மற்றும் வேலைக்காரப் பெண் படுகொலை சம்பவத்தில், மதுரை திமுக பெண்பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய திமுகவை சேர்ந்த  நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வேலைக்காரப் பெண் ஆகியோர்  கடந்த ஜூலை மாதம் 23ந்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த  கொலை வழக்கில்  மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவரிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசரணையை தொடர்ந்து,  சீனியம்மாளின் மகனான கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்படி  3 பேர் கொலைக்கு பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் செங்குளம் அருகே புதுகுளத்தில் தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

திமுகவில் நடைபெற்ற உள்கட்சி மோதல் காரணமாகவே நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு உமா மகேஸ்வரிதான் காரணம் என்பதால், அவரை கொலை செய்ததாக கார்த்திகேயன் கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கார்த்திகேயனிடம் நடத்தி வந்த அதிரடி விசாரணையை அடுத்து, மதுரை தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

சீனியம்மாள் திமுகவின் ஆதிதிராவிடர்  நலத்துறை துணை அமைப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.